எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்தேர்வை 46 ஆயிரத்து 137 மாணவர்கள் எழுதினார்கள்.
46 ஆயிரம் மாணவர்கள் எழுதினார்கள்
விழுப்புரம்:
எஸ்.எஸ்.எல்.சி. மாணவ- மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தமிழ்நாடு முழுவதும் தமிழ் தேர்வுடன் தொடங்கியது. இந்த தேர்வு வருகிற 20-ந் தேதி வரை நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 56 தேர்வு மையங்களிலும், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களிலும் என 121 தேர்வு மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது.
இந்த தேர்வை எழுத 25 ஆயிரத்து 623 மாணவ- மாணவிகள் விண்ணப்பித்தனர். நேற்று நடந்த தமிழ் தேர்வை 12 ஆயிரத்து 452 மாணவர்களும், 12 ஆயிரத்து 211 மாணவிகளும் ஆக மொத்தம் 24 ஆயிரத்து 663 மாணவ- மாணவிகள் எழுதினர். 609 மாணவர்களும், 351 மாணவிகளும் என 960 பேர் தேர்வு எழுத வரவில்லை.
பறக்கும் படையினர் கண்காணிப்பு
தேர்வில் மாணவர்கள் ஆள் மாறாட்டம், துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பியடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க கண்காணிக்கும் பணியில் 176 பறக்கும் படை குழுவினரும் ஈடுபட்டனர்.
இதுதவிர பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளரால் தேர்வுப்பணியை கண்காணிக்கும் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் லதா தலைமையிலும் பறக்கும் படை அமைக்கப்பட்டு தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாதவண்ணம் கண்காணிக்கப்பட்டது.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு மையத்தை மாவட்ட கலெக்டர் சி.பழனி நேரில் பார்வையிட்டார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள் ஆகியோர் உடனிருந்தனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 232 பள்ளிகளில் 10-ம் வகுப்பு படித்துவரும் 11 ஆயிரத்து 618 மாணவர்கள், 10 ஆயிரத்து 814 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 432 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். நேற்று 91 தேர்வு மையங்களில் நடைபெற்ற தமிழ் தேர்வை 11 ஆயிரத்து 65 மாணவர்கள், 10 ஆயிரத்து 399 மாணவிகள் என 21 ஆயிரத்து 464 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 553 பேர், மாணவிகள் 415 பேர் என 968 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதேபோல் தனி தேர்வர்களுக்கு தனியாக 6 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. இதில் 559 தனி தேர்வர்களில் 494 பேர் தேர்வு எழுதினார்கள். 65 பேர் தேர்வு எழுத வரவில்லை.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை கண் பார்வையற்ற, செவித்திறன் குறைபாடு, மனநலம் குன்றிய மற்றும் நரம்பியல் கோளாறால் பாதிக்கப்பட்ட 382 மாணவ- மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கு தேர்வை எழுத தனியாக தரைத்தளத்தில் அறை ஒதுக்கி கொடுக்கப்பட்டது. அங்கு ஆசிரியர்கள், வினாத்தாளை படித்து பார்த்து கேள்விகளுக்கு பதில் கேட்க மாணவ- மாணவிகள் அதற்குரிய விடைகளை கூறினார்கள். அதை அந்த ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதினார்கள். அதேபோல் கை, கால் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் 45 பேரும் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர். மற்ற மாணவ-மாணவிகளை காட்டிலும் இவர்கள் 427 பேருக்கும் தேர்வு எழுத கூடுதலாக 1 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டது.