புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றம்
வள்ளியூர் அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் அருகே முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
புனித செபஸ்தியார் ஆலயம்
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்தில் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாளையங்கோட்டை மறைமாவட்டம் அந்தோணி குரூஸ், தூத்துக்குடி ஆயர் இல்லம் நார்பர்ட் தாமஸ், ராஜகிருஷ்ணாபுரம் பங்குத்தந்தை ஜோசப்கிறிஸ்டியன், பத்திநாதபுரம் பங்குத்தந்தை சேகரன் குரூஸ் ஆகியோர் ஜெபம் செய்து, அர்ச்சித்து கொடியேற்றினர்.
அதனை தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும், இரவில் மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது. 7-ந் திருநாளான வருகிற 4-ந் தேதி இரவு 9 மணிக்கு புனித செபஸ்தியாரின் தேர்ப்பவனி நடக்கிறது.
தேர் பவனி
8-ந் திருநாளான 5-ந் தேதி காலையில் சோமநாதபேரி பங்குத்தந்தை ஜெகதீஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. 6.30 மணிக்கு நற்கருணை பவனி நடைபெறுகிறது. கோட்டார் மறைமாவட்டம் அமலநாதன், புருனோ, அன்பரசன் ஆகியோர் மறையுரை ஆற்றுகின்றனர்.
9-ம் திருநாளான 6-ந் தேதி மாலை 5 மணிக்கு அந்தோணி ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலியும், 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் பிஷப் இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனையும் நடக்கிறது. இரவு 9 மணிக்கு வாண வேடிக்கையும், 11 மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடைபெறுகிறது.
கூட்டுத் திருப்பலி
10-ம் திருநாளான 7-ந் தேதி காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் கூட்டுத் திருப்பலி நடக்கிறது. பின்னர் மாலை ஆராதனையும், அதனைத் தொடர்ந்து கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா அருள் செபஸ்தியான், பொருளாளர் மகான் அந்தோணி, செயலாளர் லியோ ஜெபநீலன், பங்குத்தந்தை டென்ஸில் ராஜா, நிர்வாக பொறுப்புத்தந்தை அருள்மணி மற்றும் முத்துலாபுரம் இறை மக்கள் செய்து வருகின்றனர்.