வேடசந்தூரில் லாரி உரிமையாளருக்கு கத்திக்குத்து; டிரைவர் கைது
வேடசந்தூரில் லாரி உரிமையாளரை கத்தியால் குத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார்.
வேடசந்தூரில் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 41). இவர் சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கும், வேடசந்தூர் இந்திரா நகரை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ் (52) என்பவருக்கும், லாரி வாடகை செல்வது சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று மாலை வேடசந்தூரில் ஆத்துமேட்டில் ஒரு ஓட்டல் முன்பு நடந்து சென்ற கார்த்திகேயனிடம், ரமேஷ் தகராறு செய்து கொண்டிருந்தார். இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் கார்த்திகேயனின் கழுத்தில் குத்தினார். பின்னர் அங்கு இருந்து தப்பியோடினார்.
படுகாயமடைந்த கார்த்திகேயனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.