காவிாி துலாக்கட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்


காவிாி துலாக்கட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
x
தினத்தந்தி 25 Aug 2023 6:45 PM GMT (Updated: 25 Aug 2023 6:46 PM GMT)

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் தேங்கி நிற்கும் கழிவு நீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கழிவுநீர்

மயிலாடுதுறை நகரில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறாா்கள். நகரில் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.48 கோடி மதிப்பீட்டில் பாதாளசாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2007-ம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இத்திட்டத்தின்படி நகரின் கழிவுநீர் அனைத்தும் பிரதான குழாய்கள் மூலம் மன்னம்பந்தல் தனியார் கல்லூரி பின்புறம் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு தொட்டிக்கு கொண்டு சென்று சுத்திகரிக்கப்பட வேண்டும். ஆனால் அங்கு கொண்டு செல்லாமல், சத்தியவான் பாசன வாய்க்காலில் திறந்து விடப்படுகிறது.

மேலும் கழிவுநீர் தடையின்றி செல்வதற்காக 8 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள மோட்டார்கள் பழுதடைந்துள்ளதால் ஜெனரேட்டர் மூலம் பம்பிங் செய்யும் பணி நடந்து வருகிறது.

காவிரி துலா கட்டம்

இந்த பாதாளசாக்கடைத் திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் சாக்கடை குழாய் உடைந்து, அதன்காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

கச்சேரிரோடு, கண்ணாரத்தெரு, தரங்கம்பாடி சாலை, ஐயாறப்பர் மேலவீதி உள்பட நகரில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை நகரில் புனிதமாக கருதப்படும் காவிரி ஆற்றில் பாதாள சாக்கடை கழிவு நீர் கலந்து தற்போது சாக்கடை ஆறாக காட்சியளிக்கிறது. குறிப்பாக பொதுமக்கள் புனிதமாக கருதும் துலா கட்ட காவிரி கரை பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியாக சாலையில் செல்வோர் அவதிப்படுகிறார்கள்.

புனித நீராடினர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- பொதுவாக நீர் நிலைகளில் கழிவு நீர் கலக்கக்கூடாது என்று பலமுறை நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. ஆனால் அந்த உத்தரவுகள் மீறப்பட்டு மயிலாடுதுறை நகரில் பல இடங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் காவிரி ஆற்றிலும், இன்னும் பாசன வாய்க்கால்களிலும் கலந்து வருகிறது. குறிப்பாக ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் மயிலாடுதுறை காவிரி கரையில் தீர்த்தவாரி நடைபெறும்.

இதில் தமிழகம் முழுவதும் மட்டுமின்றி , வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து புனித நீராடி செல்வதை புனிதமாக கருதுகின்றனர்.

கடந்த 2019-ம் ஆண்டு காவிரி புஷ்கர விழா நடந்த போது பல லட்சம் பேர் துலாக்கட்ட காவிரியில் நீராடி சென்றனர். இத்தகைய சிறப்பு பெற்ற இந்த துலா கட்ட காவிரி கரையில் தற்போது பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி உள்ளது. எனவே அதிகாரிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்கி காவிரி துலா கட்ட பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story