தேங்கி நிற்கும் கழிவுநீர் கால்வாய்கள்
தேங்கி நிற்கும் கழிவுநீர் கால்வாய்கள்
திருப்பூர்
சுத்தம் சோறு போடும் என்பார்கள். எனவே நாம் மட்டும் அல்ல நம்மை சுற்றியுள்ள பகுதிகளையும் நாம் பேணி பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் நாம் நோய் நொடியின்றி சீரும் சிறப்புடன் வாழ முடியும். அப்படி வாழ்வதற்காக நிறைய முயற்சிகளை தமிழக அரசு எடுத்து இருக்கிறது. அதில் ஒன்றாக தமிழக அரசு செய்திருப்பதுதான் கழிவுநீர் கால்வாய் வசதி.
இந்த கழிவுநீர் கால்வாய் வசதி மூலம் வீடுகளில், கடைகளில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு சென்று சேர்க்கிறது. இதனால் தூய்மையாக நம்முடைய இடத்தை வைத்துக்கொள்ள முடிகிறது. மேலும் நம்முடைய சுகாதாரமும் பாதுகாக்கப்படுகிறது.
ஆனால் பின்னலாடை தொழில் நகரமாக விளங்கும் திருப்பூர் மாநகரில் கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்யப்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் கழிவுநீர் தேங்கி தண்ணீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறியதாவது:-
தமிழ்செல்வி, (பெரியார் காலனி):-
திருப்பூர் ஸ்ரீ சக்தி தியேட்டர் எதிரில் உள்ள கழிவுநீர் கால்வாய் குப்பைகள் செல்ல வழியில்லாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே தேங்கி கிடக்கும் கழிவுநீரை துப்புரவு பணியாளர்கள் வாரம்தோறும் தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.
முத்து, (நாற்காலி பின்னும் தொழிலாளி):-
புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஸ்ரீ சக்தி தியேட்டர் வரை இந்த கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் கழிவுநீர் வெளியே செல்ல வழியின்றி குப்பைகளால் தேங்கி கிடக்கிறது. இந்த கழிவுநீர் கால்வாய் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், பழக்கழிவுகள் போன்ற குப்பைகளாக உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயை சில நாட்களுக்கு முன் தூர்வார முயற்சி எடுத்தும் கழிவுநீர் ஓடாமல் தேங்கியே கிடக்கிறது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வாரி முழுவதுமாக மூடி அமைத்தால் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்டாமல் தடுக்க முடியும்.
பாலசுப்பிரமணியம், (இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை உரிமையாளர்):-
நான் லட்சுமி நகர் 60 அடி ரோடு பகுதியில் 18 ஆண்டுகளாக கடை நடத்தி வருகிறேன். இந்த பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த கழிவுநீர் கால்வாய் 4 அடிக்கு மேல் இருக்கும். கட்டப்பட்ட நாள் முதல் இந்த நாள் வரை இந்த கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் இந்த கழிவுநீர் கால்வாய் மண் தேங்கி குப்பைகளால் நிரம்பி இருக்கிறது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் இறைச்சி கழிவுகளை கொட்டி செல்கிறார்கள். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சேத்தன், (பேக்கரி கடை தொழிலாளி):-
திருப்பூர் புஷ்பா தியேட்டர் ரவுண்டானா பகுதியில் இந்த கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாய் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் கடைகளுக்கு ஆட்கள் வர தயங்குகின்றனர். மேலும் மாலை நேரங்களுக்கு மேல் அதிகமாக கொசு தொல்லை இருப்பதால் நோய் பரவும் ஆபத்து உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி கழிவுநீர் தடையின்றி செல்ல நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பாண்டிசெல்வி, (கணபதிபாளையம்):-
நம்முடைய இடத்தை நாம் சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்கும் வேண்டும். மாநகராட்சி மூலம் அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாயை மக்கள் தான் சுத்தமாக வைத்து கொள்ள முயற்சி எடுக்க வேண்டும். அதேசமயத்தில் அதனை பாதுகாப்பாகவும் வேண்டும். பிளாஸ்டிக் போன்ற பொருட்களில் தான் கழிவுநீர் கால்வாய் அதிகம் தேக்கம் அடைகிறது. எனவே மக்கள் இயற்கையோடு வாழ முயற்சிக்க வேண்டும். இதுபோன்ற கழிவுநீர் கால்வாய் பகுதிகளை தூர்வாரும் துப்புரவு பணியாளர்களையும் மனிதாபிமானதோடு நடத்த வேண்டும். அப்போதுதான் நம்முடைய பகுதி தூய்மையானதாக இருக்கும், நோய் நொடியும் வராது.
இவ்வாறு பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறினர்.
இதேபோல் புதுராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் மண்ணால் மூடப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக மழை காலங்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் வழிந்தோடி செல்கிறது. அந்தசமயத்தில் அந்த பகுதியில் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது வாகன ஓட்டிகள் தண்ணீரை வாரி இரைக்கின்றனர். இதனால் பொதுமக்கள் அந்த பகுதியில் நடந்து செல்ல முடியாமல் கஷ்டப்படுகின்றனர்.
எனவே இதுபோல் தேங்கி நிற்கும், மண்ணால் மூடிக்கிடக்கும் கழிவுநீர் கால்வாயை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. அப்போதுதான் கொசுகள் அதிகம் உற்பத்தியாகாமல் நோய் நொடிகளில் இருந்து நாம் பாதுகாக்கப்பட முடியும். கழிவுநீர் கால்வாய் தேங்கி கிடப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையே. எனவே அதிகாரிகள் பற்றாக்குறையாக உள்ள துப்புரவு பணியாளர்கள் இடங்களை நிரம்பினால் நன்றாக இருக்கும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு. அப்போதுதான் சுத்தமாக, சுகாதாரத்தோடு திருப்பூர் மாநகரம் அழகுற காட்சியளிக்கும்.