ரூ.1000 கோடி விசைத்தறி காடா துணிகள் தேக்கம்


ரூ.1000 கோடி விசைத்தறி காடா துணிகள் தேக்கம்
x

உலக வர்த்தகம் பாதிப்பால் ரூ.1000 கோடி விசைத்தறி காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.

திருப்பூர்

அருள்புரம்

உலக வர்த்தகம் பாதிப்பால் ரூ.1000 கோடி விசைத்தறி காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை பொருத்தவரை விவசாயத்திற்கு அடுத்தபடியாக ஜவுளி உற்பத்தி தொழில்தான் அதிக வேலை வாய்ப்பை வழங்குகிறது. இந்த ெதாழிலை நம்பி லட்சக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால் உலக வர்த்தகம் பாதிப்பால் விசைத்தறி காடா துணி விற்பனையாகாமல் தேக்கம் அடைந்துள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் கரைப்புதூர் சக்திவேல் கூறியதாவது:-

காடா துணிகள்

உலக வர்த்தகம் பாதிப்பால் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு துணி விற்பனை பாதிப்படைந்துள்ளது. மராட்டியம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் புதிய ஜவுளி கொள்கை ஏற்படுத்தி துணி உற்பத்தி கூடங்களுக்கு என்று தனியாக மின் கட்டண சலுகை டேரிப் அமைத்து மிக குறைந்த மின் கட்டணம் வசூல் செய்கின்றனர். மேலும் நவீன விசைத்தறிகள் வாங்க 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மானியம் வழங்குகின்றனர்.

மாநிலங்களில் ஒரு யூனிட் மின் கட்டணம் ரூ.4.65 பைசா முதல் ரூ.5 வரை மட்டுமே உள்ளது. அதே சமயம் தமிழ்நாட்டில் ஒரு யூனிட் ரூ.7.45 பைசா முதல் ரூ.8 ஆக உள்ளது. வட மாநிலங்களில் துணி உற்பத்தி செலவு குறைவாக இருப்பதால் அவர்கள் காடா துணியை விலை குறைவாக கொடுக்க முடிகிறது. கடந்த 5 மாதத்தில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான விசைத்தறி காடா துணி விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளது.

துணி பைகள்

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். புதிய ஜவுளி கொள்கை அமைத்து விசைத்தறி தொழில் வளர்ச்சிக்கு என்று தனியாக அதிகாரிகள் குழுவை அமைத்து ஆராய்ந்து மானியம், வங்கி கடன் உதவி உள்ளிட்ட தேவையானவற்றை கண்டறிந்து அவற்றை செய்து கொடுத்தால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி தொழில் பழையபடி இயல்பு நிலைக்கு திரும்பும். இயற்கை பருத்தி இழைகளால் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணி பைகள் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story