கருப்பு கொடியேந்தி படகில் நின்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கருப்பு கொடியேந்தி படகில் நின்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசு சார்பில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் நேற்று திறக்கப்பட்டது. சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்படுவதை கண்டித்தும், நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டதை கண்டித்தும், தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு கொடியேற்றியும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி தூத்துக்குடி மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பல் திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கட்சியினர் கருப்பு கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் படகில் ஏறி கடலுக்குள் நின்று கருப்பு கொடியை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை முன்னாள் மாவட்ட அமைப்பாளர் வேந்தன், காஜா மொய்தீன், அப்துர் ரஹீம், ஷேக் மைதீன், அல்பத்தாஹ், ஹக்கீம், அசாருதீன், அப்துல் அஜீஸ், அபூபக்கர் சித்தீக், யாசின், மஸ்தான், ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முகமது ஜான், புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் சுஜித், பெரியார் திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் பிரசாத், மிதுன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.