தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்


தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
x
திருப்பூர்


திருமுருகன் பூண்டி நகராட்சியில் 3 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

திருமுருகன் பூண்டி நகராட்சி

தமிழகம் முழுவதும் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன் பல கட்டங்களாக போராட்டமும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருமுருகன்பூண்டி நகராட்சியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு 3 தொழிலாளர்களை ஒப்பந்ததாரர் பணிநீக்கம் செய்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு சி.ஐ.டி.யு. சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பணி நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை உடனடியாக பணியில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி நகராட்சி கமிஷனர் மற்றும் தலைவருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆனால் இதற்கு ஒப்பந்ததாரர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பணி நீக்கம் செய்யப்பட்ட ெதாழிலாளர்களை வேலைக்கு சேர்க்க வலியுறுத்தி சி.ஐ.டி.யு. ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் காலை 7 மணி முதல் தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக போலீசார் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது நாளை (சனிக்கிழமை) முதல் பணிநீக்கம் செய்யப்பட்ட 3 தொழிலாளர்கள் பணியில் சேர்த்து கொள்ளப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் வேலை நிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story