கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஸ்டார் விற்பனை களைகட்டியது


கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஸ்டார் விற்பனை களைகட்டியது
x
தினத்தந்தி 12 Dec 2022 1:07 AM IST (Updated: 12 Dec 2022 1:08 AM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஸ்டார் விற்பனை களைகட்டியது

தஞ்சாவூர்

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தஞ்சை பகுதிகளில் உள்ள கடைகளில் ஸ்டார் மற்றும் குடில் அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை

ஏசு கிறிஸ்து பூமியில் அவதரித்த தினத்தை உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஆண்டுதோறும் டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஏசுவின் பிறப்பை முன் அறிவிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் வீடுகளில் ஸ்டார்களை தொங்கவிடுவது வழக்கம். அதே போல ஏசு மாட்டு தொழுவத்தில் பிறந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் வீடுகள், தேவாலயங்களில் குடில்கள் அமைக்கப்படும்.

அதில் ஏசு பாலன், அவரது பெற்றோர் சூசையப்பர்-மாதா, தேவதூதர்கள், ராஜாக்கள் ஆகியோரின் சொரூபங்களும், ஆடு, மாடுகள் உள்ளிட்ட சிறிய உருவங்களும் இடம் பெற்றிருக்கும். இதனால் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னதாக தேவையான பொருட்களை வியாபாரிகள் கொள்முதல் செய்து கடைகளில் குவித்துவிடுவர். அவற்றை கிறிஸ்தவர்கள் மிகுந்த ஆர்வமுடன் வாங்கி சென்று பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவர். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஸ்டார், அலங்கார பொருட்களின் விற்பனை தஞ்சை பகுதிகளில் களைகட்ட தொடங்கியுள்ளது.

ஸ்டார் விற்பனை

இதுகுறித்து தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் உள்ள வியாபாரி ஆயிஷா கூறுகையில்:- வழக்கத்தைவிட இந்த ஆண்டு பல வகையான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக பிளாஸ்டிக் ஸ்டார், எல்.இ.டி. ஸ்டார், பேப்பர் ஸ்டார்கள் அதிகளவில் விற்பனையாகின்றன. இவற்றின் ஆரம்ப விலை ரூ.20-ல் இருந்து ரூ.1,200 வரை உள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் மரங்கள் 1 அடி முதல் 8 அடி வரை உள்ளன. உயரத்துக்கு ஏற்ப அவற்றின் விலை ரூ.60 முதல் ரூ.1,500 வரை இருக்கிறது.

கிறிஸ்துமஸ் தாத்தா ஆடை ரூ.250 முதல் ரூ.600 வரை இருக்கிறது. அதே போல பேப்பர், அட்டை, பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டுள்ள குடில்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குடில்களில் வைப்பதற்கான சிறய வகை மண் பொம்மைகள், குழந்தை ஏசு சொரூபங்கள், பலூன்கள், தோரணங்கள், அலங்கார மணி, டூம் லைட், எல்.இ.டி. விளக்குகள் உள்ளிட்ட அனைத்து வகையான பொருட்களின் விற்பனையும் கடந்த சில தினங்களாக தீவிரமாக விற்பனை ஆகி வருகிறது என கூறினார்.


Related Tags :
Next Story