பெரியநாயகி அம்மன் கோவிலில் லட்சார்ச்சனை தொடக்கம்
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி, லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது.
பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆடிமாத பிறப்பையொட்டி, லட்சார்ச்சனை விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி தினமும் 4 ஆயிரம் அர்ச்சனைகள் வீதம், 25 நாட்களில் 1 லட்சம் அர்ச்சனைகள் கோவிலில் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று பெரியநாயகி அம்மன் சன்னதியில் கோவில் குருக்கள்கள் அர்ச்சனைகள் செய்து வழிபாடு நடத்தினர். மேலும் ஆடி மாத வெள்ளிக்கிழமைதோறும் பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், வழிபாடு நடைபெறுகிறது. குறிப்பாக முத்தங்கி அலங்காரம், மீனாட்சி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம், வெள்ளிகவச அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரம் செய்யப்படுகிறது.
இதேபோல் ஆடி மாத பிறப்பையொட்டி பழனி மாரியம்மன் கோவில், ரண காளியம்மன் கோவில், அங்காளம்மன் கோவில் என அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் மலைக்கோவில் ஆனந்த விநாயகர் சன்னதியில் ஆடி மாத பிறப்பையொட்டி சுவாமிக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டது. முன்னதாக சிறப்பு யாகம், 16 வகை அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்