ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் தொடக்கம்


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் தொடக்கம்
x

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கோடை திருநாள் தொடங்கியது.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

கோடை திருநாள்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை மாதம் நடைபெறும் நம்பெருமாள் கோடை திருநாள் (பூச்சாற்று உற்சவம்) வெளிக்கோடை, உள்கோடை என தலா 5 நாட்கள் வீதம் 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டிற்கான நம்பெருமாள் வெளிக்கோடை திருநாள் நேற்று மாலை தொடங்கி வருகிற 29-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

வெளிக்கோடை திருநாளின் முதல் நாளான நேற்று மாலை 6 மணிக்கு உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7 மணிக்கு கோடை நாலுகால் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளுளினார். பின்னர் அங்கிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

சேர்த்தி சேவை

நம்பெருமாள் உள்கோடை திருநாள் வருகிற 30-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. 30-ந் தேதி முதல் 3-ந் தேதி வரை வீணை ஏகாந்த சேவையும் நடைபெறுகிறது. வெளிக்கோடை, உள்கோடை திருநாளை முன்னிட்டு வரும் 4-ந் தேதி வரை இரவு 8 மணிக்கு மேல் ஆரியபடாள் வாயிலில் அனுமதி கிடையாது. வரும் 29-ந் தேதி ஸ்ரீராமநவமியையொட்டி பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை நம்பெருமாள் சேரகுலவள்ளி தாயார் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது.

மே 5-ந் தேதி சித்ரா பவுர்ணமி அன்று கஜேந்திரமோட்ச புறப்பாடு நடைபெறுகிறது. அன்று மாலை 6.15 மணி முதல் 6.45 மணிக்குள் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி ஆற்று படித்துறையில் நம்பெருமாள் கஜேந்திரமோட்சம் கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.


Next Story