மாநில வில்வித்தை போட்டி
கொல்லிமலையில் வல்வில் ஓரிவிழாவையொட்டி நேற்று 2-வது நாளாக மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது.
சேந்தமங்கலம்
வல்வில் ஓரி விழா
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் கொல்லிமலையில் 2 நாட்கள் வல்வில் ஓரி விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டும் முதல் நாளான நேற்றுமுன்தினம் கொல்லிமலை செம்மேட்டில் வல்வில் ஓரி விழா, சுற்றுலா விழா, மலர்கண்காட்சி நடந்தது. 2-வது நாளான நேற்று நாய்கள் கண்காட்சி, வில்வித்தை போட்டி உள்ளிட்டவை நடைபெற்றன. மாநில அளவிலான திறந்தவெளி வில்வித்தை போட்டி நேற்று நடைபெற்றது. போட்டியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு பிரிவு மற்றும் மாவட்ட வில்வித்தை சங்கம் ஆகியவை இணைந்து நடத்தியது.
வில்வித்தை போட்டி
போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இப்போட்டி இண்டியன், ரிக்கோர்வ், காம்பவுண்ட் என மூன்று வகைகளில் 8, 10, 12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏழு பிரிவுகளிலும் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வல்வில் ஓரி சாம்பியன் கோப்பையை 98 மதிப்பெண்கள் பெற்ற மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தேவ மித்ரா வென்றார். அவருக்கு கோப்பையுடன் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசினை நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வழங்கினார். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களையும் கலெக்டர் உமா வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட வில்வித்தை சங்க தலைவர் கேசவன் செய்திருந்தார்.