மாநில அளவிலான கலைபோட்டி
மாநில அளவிலான கலைபோட்டி
தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்தில் மாநில அளவிலான கலை போட்டிகள் நேற்று நடைபெற்றன. இதில் 400 கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
கலை போட்டி
மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் சார்பில் "வந்தே பாரதம்" என்ற தலைப்பில் நடனப் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா கலைப் போட்டிகளில் பங்குபெறுவர்.
இதற்காக மாநில அளவிலான கலைப்போட்டிகள், தஞ்சையில் உள்ள தென்னக பண்பாட்டு மையத்தில் நேற்று தொடங்கியது. இந்த போட்டிகளில் மாநில அளவில் தனி மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றன.
400 கலைஞர்கள் பங்கேற்பு
இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து 60-க்கும் மேற்பட்ட நடன குழுக்களிலிருந்து 400 பேர் பங்கேற்றனர். பரதநாட்டியம், நாட்டுப்புறக்கலை, பழங்குடியின நடனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளை மூத்த பரதநாட்டிய கலைஞர்கள் ஸ்ரீமதி, தாட்சாயினி ராமச்சந்திரன், வடிவுதேவி, தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் காமராஜ் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.
தென் மண்டல கலை போட்டி
இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) ஆந்திரா, தெலுங்கான, கர்நாடக, கேரளா, லட்சத்தீவு, அந்தமான் நிக்கோபார் மாநிலங்களை சேந்த கலைஞர்கள் பங்கேற்கும் தென் மண்டல அளவிலான கலைப் போட்டிகள் நடைபெறவுள்ளது.
இந்த போட்டிகளை இந்திய கலாசார அமைச்சகத்தின் ஒருங்கிணைந்த நிதிப்பிரிவு இயக்குனர் ஹரிஷ்குமார் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார். தஞ்சை தென்னக பண்பாட்டு மையத்தின் இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் தீபக் எஸ்.கிர்வாட்கர் தலைமை தாங்குகிறார்.
தேசிய போட்டியில் பங்கேற்பு
தெற்கு மண்டல அளவிலான போட்டிகளில் பெற்றி பெறுபவர்கள் டிசம்பர் மாத இறுதியில் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். இந்த போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தென்னக பண்பாட்டு மையத்தின் நிர்வாக அலுவலர் சீனிவாசன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.