ஆதித்தனார் கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள்


ஆதித்தனார் கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள்
x

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடைபெற்றது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பொருளியல் துறை, சமூகரங்கபுரம் பைன் டெக் நிதி நிறுவனம் சார்பில், மாநில அளவிலான பொருளியல் கலை இலக்கிய விழா நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 22 கல்லூரிகளைச் சேர்ந்த 200 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். வினாடி-வினா, கட்டுரை, பேச்சு, நடனம், ஓவியம் உள்ளிட்ட 9 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. ஒவ்வொரு போட்டியிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை, சான்றிதழ் வழங்கப்பட்டது.

பரிசளிப்பு விழாவுக்கு கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் ரமேஷ் வரவேற்று பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன செயலாளர் நாராயணராஜன் வாழ்த்தி பேசினார். ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட் ராமராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளில் வென்ற மாணவ-மாணவிகளுக்கும், போட்டிகளில் நடுவர்களாக பங்கேற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். பேராசிரியர் முத்துகுமார் நன்றி கூறினார். பேராசிரியர் மருதையா பாண்டியன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழாவில் பனைமர நிதி நிறுவனர் பற்பநாத பெருமாள் நாடார், மேலாளர்கள் ராஜேஷ், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story