மாநில அளவிலான தடகள போட்டி: 77 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க அனுப்பி வைப்பு


மாநில அளவிலான தடகள போட்டி: 77 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க அனுப்பி வைப்பு
x

திருச்செங்கோட்டில் நடைபெறும் மாநில அளவிலான தடகள போட்டியில் கரூரை சேர்ந்த 77 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரூர்

77 பேர் தேர்வு

திருச்செங்கோட்டில் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை மாநில அளவிலான தடகள போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் 14, 16, 18 மற்றும் 20 வயதிற்குட்பட்டோருக்கான 4 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனியாக போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டியில் பங்கேற்பதற்காக கரூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் தடகள போட்டிகள் (ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்பட பல்வேறு போட்டிகள்) நடத்தப்பட்டு 42 மாணவர்கள், 35 மாணவிகள் என மொத்தம் 77 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தேசிய போட்டிக்கு தகுதி

இவர்களை மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி நேற்று கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட தடகள சங்க செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் சர்வதேச தடகள வீரர் விஜயகுமார் கலந்து கொண்டு வீரர்களுக்கு டீ-சர்ட் வழங்கி, வாழ்த்து தெரிவித்தார்.

இதற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள் செய்திருந்தனர். மாநில அளவிலான தடகள போட்டியில் வெற்றிபெறும் வீரர்கள் தென்னிந்திய தடகள போட்டி மற்றும் தேசிய தடகள போட்டிகளுக்கு தகுதி பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story