மாநில அளவிலான கராத்தே போட்டி: கோவை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன்


மாநில அளவிலான கராத்தே போட்டி: கோவை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன்
x

மாநில அளவிலான கராத்தே போட்டியில் கோவை மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.

திருச்சி

மாநில அளவிலான சப்-ஜூனியர், 21 வயதுக்கு உட்பட்ட பிரிவு மற்றும் சீனியர் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி மணிகண்டத்தில் உள்ள இந்திராகணேசன் கல்லூரி வளாகத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. தமிழ்நாடு பாரம்பரியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்கம் சார்பில் நடந்த இந்த போட்டியில் திருச்சி, சென்னை, காஞ்சீபுரம், கோவை, வேலூர், ஈரோடு, கரூர், மதுரை, கன்னியாகுமரி உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டியின் தொடக்க விழாவிற்கு பாரம்பரியம் மற்றும் ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க மாநில தலைவர் இளஞ்செழியன் தலைமை தாங்கினார். 2-வது நாள் போட்டிகளை திருநாவுக்கரசர் எம்.பி. தொடங்கி வைத்து, பரிசுகளை வழங்கினார். 118 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளின் முடிவில் அதிக தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப்பதக்கங்களை குவித்த கோவை மாவட்ட அணி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. 2-வது இடத்தை காஞ்சீபுரம் அணியும், 3-வது இடத்தை சென்னை அணியும் பெற்றன. வெற்றி பெற்ற வீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பரிசளிப்பு விழாவில் இந்திராகணேசன் நிறுவனங்களின் இயக்குனர் பாலகிருஷ்ணன், செயலாளர் ராஜசேகர், சர்வதேச கராத்தே நடுவர்கள் முத்துராஜு, காளீசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளில் தங்கம் வென்ற வீரர்-வீராங்கனைகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெற உள்ள தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டியிலும், இந்த ஆண்டு கடைசியில் நடைபெற உள்ள தேசிய கராத்தே போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்றனர்.


Next Story