போலீசாருக்கு சீருடையில் அணியும் நவீன கேமராக்கள்
ரோந்து, போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடும் போலீசார் தங்களது சீருடையில் அணிய நவீன கேமராக்களை போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் வழங்கினார்.
கோவை
ரோந்து, போக்குவரத்து சீரமைப்பில் ஈடுபடும் போலீசார் தங்களது சீருடையில் அணிய நவீன கேமராக்களை போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் வழங்கினார்.
சீருடையில் கேமரா
போலீசார் வழக்கு விசாரணை, ரோந்து, போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற நேரங்களில் சிலர், போலீசார் தங்களை தாக்கியதாகவோ அல்லது லஞ்சம் கேட்பதாக புகார் அளிக்கின்றனர். இதனால் போலீசார் தேவையில்லாத பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
எனவே போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமரா (பாடி கேமரா) வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசாருக்கு சீருடையில் அணியும் கேமராக்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கலந்து கொண்டு 51 போலீசாருக்கு சீருடை கேமராக்களை வழங்கினார்.
புகார் மனு மீதான விசாரணை
அதைத்தொடர்ந்து கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் கூறியதாவது:-
போலீஸ் டிஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் கோவை ஊரக பகுதி போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு வழங்க 51 சீருடை கேமராக்கள் வாங்கப்பட்டது. அதை போக்குவ ரத்து சீரமைப்பு, ரோந்து, புகார் மனு மீது விசாரணையின் போலீசார் சீருடையில் அணிந்திருக்க வேண்டும்.
அப்போது அவரது விசாரணை வீடியோவில் பதிவாகும். கேமராக்களை பயன்படுத்தும் விதம் பற்றி போலீசாருக்கு தெளி வாக கூறப்பட்டு உள்ளது. இதுதவிர காவலன் செயலி உள்பட போலீசார் துறை சார்ந்த செயலிகள் அடங்கிய டேப்லெட் (கையடக்கக் கணினி) போலீஸ் நிலையங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசாருக்கு பாராட்டு
இதையடுத்து கடந்த மாதம் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை போன்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து, கோர்ட்டில் உரிய தண்டனை பெற்று தர சிறப்பாக பணிபுரிந்த 4 இன்ஸ்பெக்டர்கள், 9 சப்- இன்ஸ்பெக்டர்கள், 3 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 30 போலீசார் என மொத்தம் 46 பேருக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு தொகையை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வழங்கினார்.