அரசு பள்ளிகளில் நவீன தொழில்நுட்ப வகுப்பறைகள்: அமைச்சர் தொடங்கிவைத்தார்


அரசு பள்ளிகளில் நவீன தொழில்நுட்ப வகுப்பறைகள்: அமைச்சர் தொடங்கிவைத்தார்
x

தனியார் நிறுவனம் சார்பில் அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப வகுப்பறைகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார்.

சென்னை,

'ரியான் டெக்' என்ற தனியார் நிறுவனம், அரசு பள்ளிகளுக்கு உதவிடும் நோக்கில், ஜப்பான் நாட்டு நவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்ட வகுப்பறைகளை (ஸ்மார்ட் கிளாஸ் ரூம்) அமைத்துக்கொடுக்க முன்வந்து இருக்கிறது. அதன்படி, சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகளில் இந்த தொழில்நுட்பங்களை கொண்டுவருகின்றனர்.

முதல்கட்டமாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட திருவல்லிக்கேணி இருசப்பா தெருவில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி சென்னை நடுநிலைப்பள்ளி, சிந்தாதிரிப்பேட்டை சென்னை உயர்நிலைப்பள்ளி, கொய்யாத்தோப்பில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய 5 பள்ளிகளில் இந்த வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

88 வகுப்பறைகள்

இதன் தொடர்ச்சியாக அதே தொகுதியில் மேலும் 13 பள்ளிகளில் இந்த வகுப்பறைகள் என மொத்தம் 18 பள்ளிகளில் 88 வகுப்பறைகளை தனியார் நிறுவனம் அமைத்துக்கொடுக்கிறது.

ஒவ்வொரு வகுப்பறைக்கும் தொழில்நுட்பத்துடன் சேர்த்து ரூ.3 லட்சத்து 20 ஆயிரம் வரை அந்த நிறுவனம் செலவு செய்வதாக ரியான் டெக் நிறுவனத்தின் நிர்வாகி மனோகர் தெரிவித்தார்.

இந்த தொழில்நுட்பத்தை ஆசிரியர்கள் எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பது குறித்து பயிற்சியும் வழங்கப்பட இருக்கிறது.

அமைச்சர் தொடங்கிவைத்தார்

முதல்கட்டமாக, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சென்னை உயர்நிலைப்பள்ளியில் இந்த வகுப்பறைகளை இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கிவைத்தார். அவருடன் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியாவும் பங்கேற்றார்.

நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாணவ-மாணவிகளுக்கு கற்பித்தல் பணி எவ்வாறு மேற்கொள்ளப்படும்? அதன் செயல்பாடு எந்த அளவுக்கு இருக்கும்? மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்குமா? என்பது குறித்தும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.


Next Story