காயம் அடைந்த ராணுவ வீரர் மனைவியிடம் மாநில மகளிர் ஆணையம் விசாரணை


காயம் அடைந்த ராணுவ வீரர் மனைவியிடம் மாநில மகளிர் ஆணையம் விசாரணை
x

படவேடு கிராமத்தில் கடை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையில் தாக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியிடம் அவர் சிகிச்சை பெற்று வரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாநில மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்,

படவேடு கிராமத்தில் கடை நடத்துவதில் ஏற்பட்ட பிரச்சினையில் தாக்கப்பட்ட ராணுவ வீரர் மனைவியிடம் அவர் சிகிச்சை பெற்று வரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் மாநில மகளிர் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கடை பிரச்சினை

ஆரணியை அடுத்த படவேடு கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தி படவேடு ரேணுகாம்பாள் கோவில் எதிரில் குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு என்பவரின் கடையில் மேல்வாடகை எடுத்து பேன்ஸி ஸ்டோர் நடத்தி வந்துள்ளார்.

கடை சம்பந்தமாக கீர்த்திக்கும் ராமுவுக்கும் இடையே இருந்த பிரச்சினையால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. மோதலில் படுகாயமடைந்த கீர்த்தி மற்றும் ராமு ஆகியோர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே கீர்த்தியின் கணவர் பிரபாகரன் ஜம்மு காஷ்மீரில் இருந்து வீடியோ வெளியிட்டார். அதில் ராமு என்பவர் அடியாட்களுடன் வந்து கடையை சூறையாடி என் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார் என கூறியிருந்தார். மேலும் கீர்த்தி மானபங்கப்படுத்தப்பட்டதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் வலியுறுத்தினார்.

2 பேர் கைது

இது தொடர்பாக போலீசார் விளக்கம் அளித்தனர். அதில் ராணுவ வீரர் மனைவியை யாரும் தாக்கி மானபங்கம் செய்யவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

இந்த மோதல் குறித்து சந்தவாசல் போலீஸ் நிலையத்தில் இருதரப்பினரும் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமு தரப்பினரை சேர்ந்த ஹரிபிரசாத் மற்றும் செல்வராஜ் ஆகிய 2 பேரை பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகளிர் ஆணையம்

இந்த நிலையில் நேற்று மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி சம்பவம் நடந்த படவேடு கோவில் பகுதிக்கு சென்றார்.

அங்குள்ள கடை வியாபாரிகள் மற்றும் பொது மக்களிடம் விசாரித்தார். இதனைத் தொடர்ந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர் மனைவியிடம் மகளிர் ஆணையத் தலைவி விசாரணை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த சம்பவத்தில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து 2 தரப்பிலும் கைது செய்துள்ளோம். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவலர்களை நியமித்துள்ளோம். சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதனை முறையாக விசாரித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசி நடவடிக்கை எடுப்போம். பாதிக்கப்பட்டவர்கள் கேட்டால் அவர்கள் வீட்டிற்கும் பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆடியோ பேச்சு

மேலும் நேற்று ராணுவ வீரர் பிரபாகரன் படவேட்டில் உள்ள வினோத் என்பவருக்கு தொலைபேசியில் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. இந்த ஆடியோவில் வினோத்திடம் அவர்கள் அடி ஆட்களை அழைத்து வந்தபோது நீ உனது நண்பர் மூலம் ஏன் அடி ஆட்களை அழைத்து வரவில்லை. நான் இந்த வீடியோவை வெளியிட்டதில் 6 கோடி நபர்கள் பார்த்துள்ளனர்.

இந்த வீடியோவை சில முக்கிய அரசியல் கட்சியினருக்கு அனுப்பி உள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடக்கும். மேலும் யாராவது உங்களிடம் கேட்டால் மிகைப்படுத்தி கூறுங்கள்'' என்றும் ராணுவ வீரர் பிரபாகரன் வினோத்திடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.


Next Story