3,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டெடுப்பு


3,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டெடுப்பு
x

சிவகங்கை நாட்டரசன்கோட்டை அருகே 3,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

சிவகங்கை


சிவகங்கை நாட்டரசன்கோட்டை அருகே 3,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.

முதுமக்கள் தாழி

சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டை அருகே கற்கால கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்காலை எச்சக்கழிவுகள் இருப்பதை சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் காளிராசா, கள ஆய்வாளர் சரவணன், இணை செயலர் முத்துக்குமரன் ஆகியோர் கண்டறிந்து உள்ளனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா கூறியதாவது:-

சிவகங்கை பகுதியில் உள்ள தொல்லியல் எச்சங்களை கண்டறிந்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அதை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் தொல்நடைக்குழு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறாக சிவகங்கை பகுதியில் பல கல்வெட்டுகளையும் தொல்லியல் சான்றுகளையும் வெளிப்படுத்தியும் ஆவணப்படுத்தியும் வருகிறோம்.

கள ஆய்வு

தொல்நடைக்குழு உறுப்பினர்கள் கள ஆய்வில் நாட்டரசன்கோட்டை தனியார் ஐ.டி.ஐ. எதிர்ப்புறத்தில் செல்கிற மண்பாதையில் அருகே அமைந்துள்ள காட்டில் 3,500 ஆண்டுகள் பழமையான கல்வட்டங்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. கற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை, எச்சங்களை பாதுகாக்க நம் முன்னோர்கள் பெரு முயற்சி எடுத்து கல்வட்டங்களை அடுக்கி உள்ளனர்.

மேலும் அங்கு கிடைக்கக்கூடிய கல் வகைகளை கொண்டு அந்த கல்வட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மலைப்பகுதிகளில் வெள்ளைக்கற்களாலும் சிவகங்கை மாவட்டம் போன்ற செம்மண் நிறைந்த பகுதிகளில் கிடைக்கப்பெறும் செம்புராங்கற்களாலும் கல்வட்டங்கள் அடுக்கப்பட்டு உள்ளன. இவை 7 மேல் காணப்படுகின்றன. அவற்றில் 3 பெரும் பகுதி சிதைவுறாமல் காணப்படுகின்றன. மற்றவை பெரும் சிதைவுக்குள்ளாகி கற்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கல்வட்டங்கள் இருந்ததற்கான எச்சமாக காணப்படுகின்றன.

உருக்காலை எச்சங்கள்

உலகில் மற்ற நாட்டினர் இரும்பு பயன்பாட்டை அறியும் முன்னரே தமிழர்கள் இரும்பின் பயன்பாட்டையும் அதை உருவாக்கவும் அறிந்து இருந்தனர். இந்த பகுதியில் இரும்பு உருக்காலை எச்சக்கழிவுகளான இரும்பு துண்டுகள் போன்ற கற்களும் மண்ணாலான குழாய்களும் காணப்படுகின்றன. இந்த காட்டை அடுத்து ஓடை ஒன்று ஓடுகிறது. ஓடையின் கரை ஓரத்தில் 3 முதுமக்கள் தாழிகள் கிடக்கின்றன. சிவகங்கை மாவட்ட பகுதியில் தொடர்ச்சியாக கல் வட்டங்கள், இரும்பு உருக்காலைகள், முதுமக்கள் தாழிகள் கிடைத்திருப்பது இந்த பகுதி பழங்காலமாக பண்பாடு நிறைந்த மக்கள் வாழ்ந்த பகுதி என்பதை உறுதி செய்ய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story