கைத்தறி சேலையில் யானை, நந்தி சிற்பம்


கைத்தறி சேலையில் யானை, நந்தி சிற்பம்
x

கைத்தறி சேலையில் யானை, நந்தி சிற்பத்தை நெய்த பரமக்குடி நெசவாளருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கினார்.

ராமநாதபுரம்

பரமக்குடி,

கைத்தறி சேலையில் யானை, நந்தி சிற்பத்தை நெய்த பரமக்குடி நெசவாளருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ. 5 லட்சம் பரிசு வழங்கினார்.

பரிசு தொகை

பரமக்குடி சரக கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தின் கீழ் 80-க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.

அந்த பரிசு தொகை பெறுவதற்காக பரமக்குடி பகுதி எமனேஸ்வரத்தில் உள்ள பாரதியார் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருக்கும் சரவணன்(வயது 44) என்பவர் காட்டன் சேலையில் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தை வரைந்து சாதனை படைத்துள்ளார்.

சான்றிதழ்

அந்த சிற்பத்தில் யானையும், நந்தியும் இணைந்து ஒரே தலையுடன் இருக்கும். ஒருபுறம் இருந்து பார்த்தால் யானை உருவமும், மற்றொரு புறம் இருந்து பார்த்தால் நந்தி உருவமும் தெரியும். நேராக நின்று பார்த்தால் 2 உருவமும் ஒரு தலையும் இருப்பது போல் தோற்றமளிக்கும். அவர் நெய்த சேலையானது கைத்தறி துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டு அதில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு கைத்தறி நெசவாளர் சரவணனுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.5 லட்சத்துக்கான காசோலையையும், சான்றிதழையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி பாராட்டி உள்ளார். ஏற்கனவே பிரதமர் மோடி படத்தை வரைந்தும், மு.க.ஸ்டாலின், கருணாநிதி உருவ படங்களை வரைந்தும் பரமக்குடி பகுதி நெசவாளர்கள் பரிசு பெற்றுள்ளனர்.

அவருக்கு பரமக்குடி கைத்தறி நெசவாளர்கள், சங்க உறுப்பினர்கள், தனி அலுவலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story