சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு-பலத்த போலீஸ் பாதுகாப்பு


சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு-பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

சதுர்த்தியையொட்டி வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் மோகனூர் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

நாமக்கல்

மோகனூர்:

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் புத்தாடை அணிந்து சாமி தரிசனம் செய்தனர். அதேபோல் பல வகையான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன. பக்தர்கள் தங்களது வீடுகளிலும் சிறிய ரக விநாயகர் சிலைகளை வைத்து, பூஜை செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பக்தர்கள் சார்பில் 800-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. இவற்றை நீர்நிலைகளில் கரைக்கும் பணி நேற்று தொடங்கியது. இதையொட்டி சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

சிலைகள் கரைப்பு

மோகனூர் காவிரி ஆற்றில் நேற்று 20-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. முன்னதாக சிலைகள் மேளதாளங்கள் முழங்க, வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன. ராசிபுரம், மல்லூர், சேலம், நாமகிரிபேட்டை பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் இறங்கி விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

இதேபோல் வீடுகளில் பிரதிஷ்டை செய்து, வழிபாடு நடத்தப்பட்ட சிலைகளும் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதையொட்டி மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் வருவாய்த்துறையினர், பேரூராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story