டாக்டர் மு.வரதராசனாருக்கு ரூ.66 லட்சத்தில் பூங்காவுடன் உருவச்சிலை
ராணிப்பேட்டையில் டாக்டர் மு.வரதராசனாருக்கு ரூ.66 லட்சத்தில் பூங்காவுடன் உருவச்சிலை அமைக்க அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார்.
தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற செய்தி மக்கள் தொடர்பு துறை மானியக் கோரிக்கையின் போது டாக்டர் மு.வரதராசனாருக்கு திருவுருவச்சிலை அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்தார்.
அதன்படி ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானம், கெல்லீஸ் சாலையில், மாவட்ட நூலகம் அருகே சிறு பூங்காவுடன் டாக்டர் மு.வரதராசனாருக்கு திருவுருவச் சிலை அமைக்கும் பணிக்கு ரூ.65 லட்சத்து 76 ஆயிரத்துக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.
டாக்டர்.மு.வரதராசனார் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம் வேலம் கிராமத்தில் 25.4.1912 அன்று பிறந்தார். சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழில் முதல் முனைவர் பட்டமும், சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார்.
நிகழ்ச்சியில் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத் துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் சொக்கலிங்கம், ஜெயராமன், உதவி செயற் பொறியாளர் திரிபுரசுந்தரி, தாசில்தார் வெங்கடேசன், நகராட்சி ஆணையாளர் விநாயகம் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.