தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் கருத்து


தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா?  சமூக ஆர்வலர்கள் கருத்து
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தலைவர்களின் சிலைகள் பராமரிக்கப்படுமா? என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

விழுப்புரம்

தலைவர்களின் நினைவாக சிலைகள் வைக்கிறோம். அவர்களின் சாதனைகள், பெருமைகள் வழிவரும் சந்ததிகளுக்கு தெரியவேண்டும் என்பதே அதன் நோக்கம்.

பொறுமை இல்லை

சிலைகள் என்று சொன்னாலும் அச்சிலைகளுக்கு எவரேனும் இழுக்கு ஏற்படுத்துவார் என்றால் யாரும் பொறுத்துக் கொள்வது இல்லை.

அதைத் தலைவருக்கே ஏற்பட்ட இழுக்காகக் கருதி வெகுண்டு எழுகிறோம்.

அத்தகைய மனம்கொண்ட நாம், அந்தச் சிலைகளுக்கு இயற்கையில் ஏதேனும் குற்றம் குறை வராதவாறு பார்த்துக் கொள்கிறோமா என்றால்? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

விழுப்புரம் மாவட்டத்தில் 4 இடங்களில் திருவள்ளுவர் சிலையும், 2 இடங்களில் பாரதிதாசன் சிலையும், ஒரு இடத்தில் ஜவஹர்லால் நேரு சிலையும், 14 இடங்களில் மகாத்மா காந்தி சிலையும், 72 இடங்களில் அம்பேத்கர் சிலையும், 11 இடங்களில் தந்தை பெரியார் சிலையும், ஒரு இடத்தில் இந்திராகாந்தி சிலையும், 3 இடங்களில் ராஜீவ்காந்தி சிலையும், 7 இடங்களில் காமராஜர் சிலையும், 27 இடங்களில் பேரறிஞர் அண்ணா சிலையும், 22 இடங்களில் எம்.ஜி.ஆர். சிலையும் நிறுவப்பட்டுள்ளன.

அலங்காரம்

சிலைகளை வைப்பதுடன் சரி,பிறந்தநாள், நினைவு நாட்களில் மட்டுமே அலங்காரம் செய்கிறோம். மற்ற நாட்களில் காகங்களையும், குருவிகளையும் அலங்கோலப்படுத்த விடுகிறோம்.

தலைவர்களை கவுரவப்படுத்த வேண்டும் என்ற நமது அடிப்படை நோக்கம் இங்கே அர்த்தமற்றுப் போவதை யாரும் உணர மறுக்கிறோம்.

இதுபற்றி சமூகப் பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

ஆர். நல்லக்கண்ணு

இதுபற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு கூறியதாவது:-

மக்கள் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை ஒப்படைத்து மறைந்த தலைவர்களுக்கு சிலைகள் அமைப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் சிலைகள் வைப்பதோடு தங்கள் கடமை முடிந்து விட்டது என்று யாரும் கருதக்கூடாது.

தலைவர்களின் சிலைகளை தினந்தோறும் தூய்மை செய்து பராமரிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியவில்லை என்றால் அவர்களது பிறந்தநாள், நினைவுநாளின்போது சிலைகளை நன்றாகச் சுத்தம் செய்து, வர்ணம் பூசவேண்டும். மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களது கொள்கைகளை பரப்ப வேண்டும்.

இதுதான் மறைந்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகவும், புகழ் அஞ்சலியாகவும் இருக்கும்.

இவ்வாறு ஆர்.நல்லக்கண்ணு கூறினார்.

சிவாஜி கணேசன் சிலை

மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலை பராமரிப்பு குறித்து நடிகர் பிரபு கூறியதாவது:-

என்னுடைய தந்தையார் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அடையாறில் மணிமண்டபம் அமைத்து தமிழக அரசு சிறப்பான முறையில் பராமரித்து வருகிறது.

மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பிறந்தநாள், நினைவுநாட்களில் மட்டுமின்றி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டு இருக்கிறோம்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து பராமரித்து அவர்களது புகழைப் போற்ற வேண்டும்.

இவ்வாறு நடிகர் பிரபு கூறினார்.

மக்களிடமும் விழிப்புணர்வு தேவை

விழுப்புரம் மாவட்ட தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு செயலாளர் விக்கிரமன்:-

முன்பெல்லாம் தலைவர்களின் சிலைகள் தரம் உணர்ந்து எழுப்பப்பட்டது. ஆனால் இன்றோ அரசியல் ஈடுபாடு கொண்டவர்கள் இறந்தாலே உடனடியாக அவர்களுக்கு சிலை வைப்பது என்பது மரபாகிவிட்டது. தற்காலத்தில் தெருவுக்கு ஒரு சிலை என்ற நிலை பரவலாக்கப்பட்டுவிட்டது. விழுப்புரத்தில் பராமரிப்பு என கூர்ந்து நோக்கினால் ‌பழைய பஸ் நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை, அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலை, கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலை, கருணாநிதி சிலை‌ ஆகிய சிலைகள்‌ வாரம் ஒரு முறை பராமரிக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டு தூய்மையுடன் காட்சியளிக்கிறது. மற்ற இடங்களில் வெவ்வேறு கட்சி தலைவர்களின் நினைவாக சிலை வைத்தார்களே தவிர பராமரிப்பதில்லை.

சமீபத்தில் விழுப்புரம் தலைமை தபால் நிலையத்துக்கு அருகில் பெரியார் சிலை எந்த நிலைக்கு ஆளானது என்பது அனைவருக்கும் தெரியும். இனி வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறக்கூடாது என்ற நோக்கத்தோடு அரசே கம்பிவேலி போட்டு பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மக்களிடமும் விழிப்புணர்வு வேண்டும், சிலையின் மீதுதான் நோட்டீசு ஒட்டுவது, சிலையை மறைப்பதுபோல பதாகைகள் வைப்பது என்ற செயல்கள் நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது. திருவள்ளுவர் சிலைக்கு அருகில் எழுதப்படும் திருக்குறள் மீதே நோட்டீசு ஒட்டுகிறார்கள். இவற்றையெல்லாம் மக்கள் தவிர்ப்பதோடு ஒழுங்கீனமற்ற செயல் என்பதை உணர வேண்டும். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் இனியாவது திருந்துவார்களா? தெளிவடைந்தால் தலைவர்களின் சிலைகள் பாதுகாப்பாகவும், பராமரிப்புடனும் இருக்கும்.

தியாகத்தை போற்றும் செயல்

மருதம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிகார்த்திகேயன்:-

மக்களுக்காக உழைத்தவர்களை, அதற்காக மடிந்தவர்களை போற்றும் பண்பாட்டின் அடையாளத்தில் ஒன்று அவர்களுக்கு சிலை எழுப்பி கொண்டாடுவது. ஆனால், சில விரும்பத்தகாத செயல்களுக்காக அரசு, கம்பி கூண்டுக்குள் தலைவர்களின் சிலையை பாதுகாப்பு செய்வதும் அநீதியானது. தவறு இழைத்தவர்கள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போற்றுதலுக்குரிய தலைவர்களுக்கு சிலை வைப்பதோடு தமது பணியாக இல்லாமல் சமூகத்தின் மரியாதையை அவர்களுக்கு செய்யும் வகையில் கம்பி வலை இல்லாமல் அப்பகுதி மக்களின் பாதுகாப்பில் உள்ளதை பராமரிப்பில் உணர்த்த வேண்டும்.

செஞ்சி அருகே கீழ்மாம்பட்டு சிவராஜ்:-

செஞ்சி பகுதியில் தலைவர்களின் சிலைகள் உரிய முறையில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர்களின் பிறந்த நாள் வரும்போது சிலைகள் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இருந்தும் சாலை விரிவாக்கம் போன்ற பணிகளால் சிலைகளை அப்புறப்படுத்தும்போது அந்த சிலைகளை வேறு பாதுகாப்பான இடத்தில் மீண்டும் அரசு வைக்க வேண்டும். தலைவர்களின் சிலைகளை பாதுகாப்பது அவர்கள் செய்த தியாகத்தை போற்றும் வகையில் நாம் அவர்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.

பராமரிப்புடன் பாதுகாக்க வேண்டும்

திண்டிவனத்தை சேர்ந்த அனைத்திந்திய திருவள்ளுவர் நலச்சங்க தலைவி சிவஜோதி:-

தலைவர்களின் சிலைகள் பாதுகாக்கப்படுவதன் மூலம் வருங்கால தலைமுறைகள் தெரிந்துகொள்ள உதவும். நாட்டுக்காக தலைவர்கள் செய்த தியாகத்தை நாமும் நம்முடைய சந்ததிகளும் மறக்கக்கூடாது. எனவே அரசு, தலைவர்களின் சிலைகளை பராமரிப்புடன் பாதுகாக்க வேண்டும். தலைவர்கள் எழுதியுள்ள புத்தகங்களை வருங்கால சந்ததிகளை படிக்க வைத்து சமூக அக்கறையுள்ள வருங்கால சந்ததிகளாக உருவாக்கினால் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக்கொள்ள உதவும்.

காட்சி பொருளாக...

உளுந்தூர்பேட்டை அருகே நன்னாவரம் கிராமம் அறிவேலன்:-

நாட்டுக்கு ஆற்றிய சேவை, தியாகத்தை நினைவு கூர்ந்து போற்றும் வகையில்தான் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தலைவர்கள் மற்றும் தியாகிகளின் சிலைகளை வைத்து மரியாதை செலுத்தி வருகிறோம். ஆனால் அந்த சிலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. சில இடங்களில் சிதிலம் அடைந்தும், தூசு படிந்தும், காக்கை, குருவிகளின் எச்சங்கள் படிந்தும் இருப்பதை காணும்போது அந்த தலைவரின் சிலையை ஏதோ காட்சி பொருளாக வைத்திருக்கிறார்களோ என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இன்னும் சில இடங்களில் சிலைகளை சுற்றி புதர்கள், குப்பைகள் நிறைந்து கிடப்பது, சிலை அருகில் அமர்ந்து மது அருந்துவது போன்ற செயல்களும் அரங்கேறி வருவது வேதனையாக உள்ளது. இந்த அவல நிலை மாற வேண்டும். சிலையை வைத்தவர்கள் பிறந்தநாள், நினைவுநாள் மட்டும் என்று இல்லாமல் அவ்வப்போது முறையாக பராமரிக்க வேண்டும். அப்போதுதான் அந்த சிலையை வைத்ததற்கான உண்மையான அர்த்தம் வெளிப்பட்டு சிலைவைத்தவர்கள் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையையும், நன்மதிப்பையும் ஏற்படுத்தும்.

பராமரிக்க வேண்டும்

தியாகதுருகம் அருகே வடபூண்டி கிராமம் சிவச்சந்திரன்:-

நாட்டுக்காக தியாகம், சேவை செய்த தலைவர்கள் மறைந்தாலும் அவர்களின் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பஸ்நிலையங்கள், முக்கிய சந்திப்புகள் போன்ற பொது இடங்களில் அவர்களின் சிலைகளை அமைத்து மரியாதை செய்கிறார்கள். ஆனால் அமைக்கப்பட்ட சிலைகளுக்கு அம்மாவாசை, பவுர்ணமியை போன்று தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இதர நாட்களில் ஒரு சில தலைவர்களின் சிலைகளை தவிர பெரும்பாலான சிலைகளை யாரும் கண்டுகொள்வதில்லை. இதனால் அந்த சிலைகள் சிதிலம் அடைந்தும், பறவைகளின் எச்சங்கள் படிந்தும், வெயில் மற்றும் மழையில் நனையும் விதமாக உள்ளது. மேலும் சில தலைவரின் சிலைகள் அமைந்துள்ள பகுதிகள் சுவரொட்டிகள் ஒட்டும் இடமாகவே மாறி உள்ளது. எனவே இதுபோன்ற நிலையை மாற்ற தலைவரின் சிலைகளை அனுமதி பெற்று அமைக்கவும், அதை அமைத்தவர்கள் தொடர்ந்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சமூக பார்வையாளர்கள் கூறினர்.

தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற உத்தரவிட்டது போன்று அனுமதியோடு வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளை தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் என்ற உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்கள் மத்தியில் இருக்கிறது.


Next Story