மயிலாடுதுறை அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்பு


மயிலாடுதுறை அருகே வீட்டில் பதுக்கிய ரூ.2 கோடி மதிப்புள்ள சிலைகள் மீட்பு
x

மயிலாடுதுறை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள புராதன சிலைகளை போலீசார் மீட்டனர். இந்த சிலைகளை பதுக்கி வைத்து விற்க முயன்ற ஆசாமி கைது செய்யப்பட்டார்.

சென்னை,

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே உள்ள மலைமேடு என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், தொன்மையான 2 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த சிலைகளை விற்பதற்கு விலை பேசி வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த சிலைகளை மீட்டு உரிய நடவடிக்கை எடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த் முரளி உத்தரவிட்டார். ஐ.ஜி.தினகரன் மேற்பார்வையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சின்னத்துரை மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் குறிப்பிட்ட வீட்டுக்குள் மாறு வேடத்தில் புகுந்தனர். சிலை வியாபாரிகள் போல, அந்த வீட்டில் இருந்த சுரேஷ் (வயது 32) என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

மீட்பு-கைது

பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 சிலைகளையும் மாறுவேட போலீசாரிடம் காட்டி, ரூ.2 கோடி தந்தால், சிலைகளை தருவதாக சுரேஷ் தெரிவித்தார். உடனே மாறு வேட போலீசார் 2 சிலைகளையும் கைப்பற்றினார்கள். சுரேசும் கைது செய்யப்பட்டார்.

மீட்கப்பட்ட சிலைகளில் ஒன்று புத்தமத பெண் தெய்வமான தாராதேவியின் சிலை. மற்றொன்று விநாயகர் சிலை. தாராதேவியின் சிலை 700 ஆண்டுகள் பழமையானது. விநாயகரின் சிலை 300 ஆண்டுகள் தொன்மையானது. தாராதேவியின் வழிபாடு, திபெத் நாட்டில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.

மீட்கப்பட்ட இந்த சிலைகள் எந்த கோவிலில் திருடப்பட்டது என்பது பற்றியும், இவற்றை சுரேசிடம் கொடுத்தது யார், என்பது பற்றியும் விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story