ஆழியாற்றில் குழாய்கள் அமைத்து தண்ணீர் திருட்டு
ஆழியாற்றில் குழாய்கள் அமைத்து தண்ணீர் திருடப்பட்டது. இதில் ஈடுபட்ட தோட்டங்களின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பொள்ளாச்சி
ஆழியாற்றில் குழாய்கள் அமைத்து தண்ணீர் திருடப்பட்டது. இதில் ஈடுபட்ட தோட்டங்களின் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
ஆழியாறு அணை
பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணை மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் பாசனம் பெறுகின்றன. மேலும் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகள் மற்றும் கோவை குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இதை தவிர கேரளாவுக்கு பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.
தற்போது மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைவாக உள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆனாலும் பழைய ஆயக்கட்டு பாசனம், தமிழகம், கேரளாவுக்கு குடிநீர் தேவைக்கு ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
தண்ணீர் திருட்டு
இதற்கிடையில் ஆற்றில் குழாய் அமைத்து தண்ணீர் திருடுவதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, மின்சாரத்துறையினர் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் நேற்று ஆழியாற்றில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விதிமுறைகளை மீறி தண்ணீர் திருட்டுக்கு அமைக்கப்பட்ட குழாய்களை அதிகாரிகள் அகற்றினர். மேலும் சம்பந்தப்பட்ட தோட்டங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
குற்றவியல் நடவடிக்கை
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மழை இல்லாததால் ஆழியாறு அணையில் நீர்இருப்பு குறைவாக உள்ளது. இருப்பினும் பாசனத்திற்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. ஆனால் ஆற்றில் தண்ணீர் திருடுவதால் குடிநீருக்கும், பாசனத்திற்கும் போதிய அளவு தண்ணீர் கிடைப்பதில்லை.
இதனால் தண்ணீர் திருட்டுக்காக அமைக்கப்பட்ட குழாய்களை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். சட்டவிரோதமாக குழாய் அமைத்து தண்ணீர் திருடினால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மின் துண்டிப்பு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.