பெரம்பலூர் நீர் நிலைகளுக்கு காவிரி தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


பெரம்பலூர் நீர் நிலைகளுக்கு காவிரி தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்-விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x

பெரம்பலூர் நீர் நிலைகளுக்கு காவிரி தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் சங்கத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பெரம்பலூர் தீரன் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில துணைத் தலைவர் துளசி மணி தலைமை தாங்கினார். கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் ஞானசேகரன், பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஜெயராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பி.எஸ். மாசிலாமணி கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து பேசினார்.

கூட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் இடிந்து போன தளவானூர் மற்றும் எல்லீஸ் தடுப்பணைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு அமைத்திட வேண்டும். பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு 2 தடுப்பணைகளை அமைக்க உள்ளதை தமிழக அரசு தடுத்திட வேண்டும். ரசாயன உரம் பற்றாக்குறையை தடுத்து, உரிய காலத்தில் தட்டுப்பாடு இன்றி உரம் வழங்கிட வேண்டும். தொடர் மழையினால் பாதிப்பிற்குள்ளான வேளாண் பயிர்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். வறட்சி மாவட்டமான பெரம்பலூருக்கு திருச்சி மாவட்டம் முசிறியில் இருந்து வரத்து வாய்க்கால்கள் அமைத்து காவிரி தண்ணீர் கொண்டு வந்து நீர் நிலைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் அமெரிக்கன் படைப்புழுக்களால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு அடிக்க மருந்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story