தட்டுப்பாடின்றி காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்


தட்டுப்பாடின்றி காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
x

தட்டுப்பாடின்றி காவிரி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை

விராலிமலை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் காமுமணி தலைமையில் ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணை தலைவர் லதா, வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அலுவலக எழுத்தர் சங்கர் தீர்மானங்களை வாசித்தார். தொடர்ந்து ஒன்றிய பொது செலவினங்கள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து ஒன்றிய கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:- பூதங்குடி ஊராட்சி பகுதியில் உள்ள அங்கன்வாடிகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். விராலிமலையில் கால்நடைகள் திருட்டு போவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மை துறையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியங்களை தெரிவிக்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவதை தாமதம் இல்லாமல் உடனடியாக வழங்க வேண்டும். விராலிமலையில் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் காவிரி குடிநீர் வருகிறது. அதனால் பொது மக்களுக்கு போதுமான அளவு கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகையால் கூடுதலாக காவிரி குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விராலிமலை முருகன் கோவில் மலைப்பாதை, பள்ளி பகுதிகள், கடைவீதி, செக்போஸ்ட் ஆகிய பகுதிகளில் மாலை நேரத்தில் போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வேண்டும். ராஜாளிபட்டி ஊராட்சி புரசம்பட்டி காலனியில் குடிநீர், தெரு விளக்கை சீர் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய குழு உறுப்பினர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முடிவில் ஒன்றிய மேலாளர் கண்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் சத்தியசீலன், மணிகண்டன், மதியழகன் உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story