களக்காடு பச்சையாற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
களக்காடு பச்சையாற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
களக்காடு பச்சையாற்றில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
மணல் திருட்டு
நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான பெண்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் முத்துவளவன் தலைமையில் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், "களக்காடு பகுதியில் உள்ள ஊராட்சி மன்றங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் கீழதேவநல்லூர் கிராமத்தை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் வேலை சரியாக வழங்கப்படவில்லை. இந்த பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. ஆனால் இங்கு சாலைகள் மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த பகுதியில் குடிநீர் பஞ்சம் அதிகமாக உள்ளது. இங்குள்ள பச்சையாற்றின் படுகையில் மணல் திருட்டு அதிகமாக நடக்கிறது. இதில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.
அங்கன்வாடி கட்டிடம்
நெல்லை அருகே கொண்டாநகரம் ஊர் பொதுமக்கள் அங்கன்வாடி குழந்தைகளுடன் வந்தனர். தங்கள் ஊரில் அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தரக்கோரி மனு கொடுத்தனர்.
தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தினர் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில், "தாமிரபரணி ஆற்றை வனத்துறையின் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். ஆற்றில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகளை நடவேண்டும். பாபநாசத்தில் ஆற்றில் பரிகார பூஜை செய்து துணிகளை போடுகிறார்கள். இதனை தடுக்க பழைய துணி போடும் பெட்டியை பராமரிக்க வேண்டும். ஆற்றில் சாக்கடை கழிவுகள் கலப்பதை தடை செய்ய வேண்டும். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கரையோர பகுதி மக்களுக்கு காசுக்கு தண்ணீர் விற்பனை செய்யும் எந்த திட்டத்தையும் அனுமதிக்க வேண்டாம். ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்த வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தனிப்படை அமைக்க வேண்டும். மணல் கொள்ளையர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.
சந்திப்பு பஸ்நிலையம்
நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை உடனடியாக திறக்க வலியுறுத்தி தென்தமிழர் கட்சியினர் நெல்லை மாவட்ட பொறுப்பாளர் பாண்டி தலைமையில் மனு கொடுத்தனர்.
நம்பியாறு பாதுகாப்பு இயக்கத்தினர், "நதியில் உள்ள ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும். கோட்டை கருங்குளம் அணையை தூர் வாரவேண்டும். பெருங்குளத்தில் உள்ள தடுப்பணை சேதம் அடைந்துள்ளது. அதை சீரமைக்க வேண்டும்" என்று மனு கொடுத்தனர்.
மானூர் யூனியனுக்கு உட்பட்ட அலவந்தான்குளம் ஊர் மக்கள், தங்கள் ஊரில் 3½ ஆண்டுகளாக நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கூறி மனு கொடுத்தனர்.