பழையசீவரம் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்; கிராம மக்கள் கோரிக்கை மனு


பழையசீவரம் ஊராட்சியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் பழையசீவரம் கிராமத்தில் நெடுஞ்சாலையோரத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில் நெடுஞ்சாலை பணி விரிவாக்கத்திற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள நெடுஞ்சாலை துறையின் மூலம் இழப்பீடு பணம் பெற்றுக்கொண்டனர்.

இழப்பீடு பணம் பெற்ற பின்னரும் மீண்டும் அதே பகுதியில் சாலையோரத்திலேயே ஆக்கிரமித்து கொள்வதோடு அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சமுதாய கூடத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி கடைகள் மற்றும் கட்டிடங்களை கட்டி இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக சமுதாய கூடத்திற்கு செல்ல முடியாத நிலையில் கிராம மக்கள் அவதிக்குள்ளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சிலர் உள்ளாவூர் மெயின் சாலையில் உள்ள சுடுகாட்டு நிலத்தையும் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி கொள்வதால் வரும் காலத்தில் சுடுகாடு இல்லாத நிலை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பாதிக்கப்படும் பழைய சீவரம் கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி நீலமேகன் தலைமையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கிராம மக்களின் நலன் கருதி நலத்திட்ட பணிகளுக்கு இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பழைய சீவரம் ஊராட்சி பகுதியில் பெருமாள் கோவில் அடிவாரம், கங்கையம்மன் கோவில், பெரிய காலனி, சிறிய காலனி, உள்ளிட்ட பகுதிகளில் போலி மது விற்கப்படுகிறது. போலி மது விற்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.


Next Story