ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தக்காளி விலை உயர்வு
சமையலில் முக்கிய பங்கு வகிக்கும் காய்கறியில் முக்கியமானது தக்காளி. உணவு தயாரிக்கும் போது புளிப்பு சுவை சேர்க்க புளிக்கு பதிலாக தக்காளி சேர்க்கப்பட்டு வருகிறது. தக்காளி சேர்க்கப்படும் உணவு தனி சுவையை தரும் என்பார்கள்.
தற்போது நாடு முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100-ல் இருந்து ரூ.120 வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் இன்றைக்கு சமையல் அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படும் பொருளாக தக்காளி மாறிவிட்டது.
நாளுக்கு நாள் அதிகாரித்து வரும் தக்காளியின் விலை உயர்வால் அதிர்ச்சியில் இருக்கும் இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமையல் எப்படி செய்வது என்ற நிலையில் உள்ளனர்.
தக்காளி மட்டுமின்றி மளிகை பொருட்களில் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மட்டுமின்றி குடும்பத்தலைவர்களுக்கு அதிர்ச்சியில் உள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்தநிலையில் தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சமீபத்தில் ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்து இருந்தார்.
அதனைத்தொடர்ந்து சென்னையில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையை விட திருவண்ணாமலையில் தக்காளியின் விலை கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.