நெடும்புலி ஊராட்சியை சீமை கருவேல மரங்கள் இல்லாத ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை- தலைவர் தகவல்
நெடும்புலி ஊராட்சியை சீமை கருவேல மரங்கள் இல்லாத ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பி.மாறன் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை
நெடும்புலி ஊராட்சியை சீமை கருவேல மரங்கள் இல்லாத ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி மன்ற தலைவர் பி.மாறன் தெரிவித்தார்.
நெடும்புலி ஊராட்சி
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் நெடும்புலி ஊராட்சி உள்ளது. நெடும்புலி, புதுப்பேட்டை, தடுத்துராயன்பேட்டை, நெடும்புலி காலனி ஆகிய குக்கிராமங்கள் இதில் அடங்கி உள்ளன. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக அதே பகுதியை சேர்ந்த பி.மாறன் உள்ளார். ஊராட்சியில் செய்யப்பட்டு உள்ள வளர்ச்சி பணிகள் குறித்து பி.மாறன் கூறியதாவது:-
நான் ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றபின் நெடும்புலி சத்தியமூர்த்தி தெருவில் ரூ.10 லட்சத்து 50 ஆயிரம், சக்தி நகரில் ரூ.9 லட்சத்து 5 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் ரோடு, தடுத்துராயன்பேட்டை, வி.ஐ.பி.நகர், அண்ணாமலை நகர், துர்காதேவி நகரில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்திலும், புதுப்பேட்டை, நெடும்புலி சுடுகாடு அருகே ரூ.3 லட்சத்திலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது.
தடுத்துராயன்பேட்டை, திருவேங்கடம் நகரில் ரூ.4 லட்சத்திலும், விநாயகர் கோவில் தெருவில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரத்திலும், நெடும்புலி, ஆச்சாரி தெருவில் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்திலும், நெடும்புலி காலனி, மாரியம்மன் கோவில் தெருவில் ரூ.2 லட்சத்திலும், ஒத்தவாடை தெருவில் ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்திலும், புதுப்பேட்டை பெரிய தெருவில் ரூ.5 லட்சத்து 81 ஆயிரத்திலும், தடுத்துராயன்பேட்டையில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்தில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டது.
மேலும் நெடும்புலியில் ரூ.30 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி, தடுத்துராயன்பேட்டை, வி.ஐ.பி.நகரில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தில் பைப்லைன், நெடும்புலி காலனியில் ரூ.8 லட்சத்து 89 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இவை அனைத்தும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
பணிகள் தொடக்கம்
அமீது நகரில் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் பேவர் பிளாக் ரோடு, சிவன் கோவில் தெருவில் ரூ.10 லட்சத்து 6 ஆயிரத்தில் ஓரடுக்கு ஜல்லிசாலை, புதுப்பேட்டை குறுக்கு தெருவில் ரூ.6 லட்சத்தில் சிறுபாலம் உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது. பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 28 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது.
நெடும்புலி ஊராட்சியில் நிலத்தடி நீரை உறிஞ்சி நீர் மட்டத்தை குறைக்கும் சீமை கருவேல மரங்களை முழுவதுமாக அகற்றி சீமை கருவேல மரங்கள் இல்லாத ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. ஊராட்சியில் சுத்திகரிக்க குடிநீர் நிலையம், கூட்டுறவு பால் சொசைட்டி, உடற்பயிற்சி கூடம், சமுதாய கூடம், புதுப்பேட்டை, நெடும்புலி பகுதியில் 2 கழிப்பிடம், சுடுகாடுகளுக்கு தனி இடம் கேட்டு கோரிக்கை வைத்து உள்ளேன். நெமிலி தாலுகாவில் உள்ள நெடும்புலி கிராமத்தை சுற்றி 60 கிராமங்களுக்கு மேல் உள்ளது. கிராமத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் அரக்கோணம், காவேரிப்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் வருவதற்குள் தீயில் பொருட்கள் சேதமடைந்து விடுகிறது. ஆகவே மக்களின் நலனை கருத்தில் கொண்டு நெடும்புலியில் தீயணைப்பு நிலையம் அமைக்க கோரிக்கை வைத்து உள்ளேன்.
பனைவிதைகள்
கச கால்வாய் பகுதியில் ஆயித்திற்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டு உள்ளது. ஊராட்சியை பசுமையாக மாற்ற மரக்கன்று நடப்பட்டு உள்ளது. நான் தினமும் காலையில் ஒவ்வொரு வார்டுக்கும் நேரடியாக சென்று குப்பைகள் அள்ளப்படுகிறதா, குடிநீர் சரியான நேரத்திற்கு வழங்கப்படுகிறதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறேன்.
வார்டு பகுதியில் மக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு முன்பாக அந்த பகுதியில் உள்ள குறைகளை நான் நேரடியாக அறிந்து பார்வையிட்டு உடனுக்குடன் தீர்த்து வைத்து விடுவேன். தடையில்லாமல் குடிநீர் கிடைக்க 3 பேஸ் மின்சாரம் உள்ள நெடும்புலி கிராமத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளேன். தடையில்லாமல் குடிநீர் கிடைக்கவும், குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதியில் புதிய குழாய்கள் அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மின் விளக்குகள் இல்லாத பகுதியில் புதிய மின்விளக்குகள் பொருத்தியும், பழுதடைந்த மின் விளக்குகள் உடனுக்குடன் மாற்றி கொடுக்க நடவடிக்கை எடுத்து உள்ளேன்.
குடிசையில்லா ஊராட்சி
நெடும்புலி ஊராட்சியை குடிசையில்லா ஊராட்சியாக மாற்ற 60 பயனாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு இலவச வீடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராணிப்பேட்டைமாவட்டத்தில் நெடும்புலி ஊராட்சியை முதன்மையான ஊராட்சியாக மாற்ற சோளிங்கர் தொகுதி ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ, நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு, துணை தலைவர் ச.தீனதயாளன், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள் பெருமாள், ஒன்றிய கவுன்சிலர் எச்.அரூண் ஆகியோரின் ஒத்துழைப்போடு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் என்.பாபு, வார்டு உறுப்பினர்கள் தீபா செந்தில்குமார், ஏ.விஜயா அருணாச்சலம், வி.இ.சங்கர், வி.செண்பகம் வினோத், வி.யோகானந்தன், வி.பிரேமா வேணுகோபால், ஆர்.அருள், கே.சுகன்யா கோட்டீஸ்வரன் ஆகியோருடன் இணைந்து மாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.