ஸ்ரீரங்கம் கோவிலுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை முன்பு இதிகாச எரிப்பு போராட்டம் என பரவிய தகவலால், ரெங்கநாதர் கோவிலுக்கும், பக்தர்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை முன்பு இதிகாச எரிப்பு போராட்டம் என பரவிய தகவலால், ரெங்கநாதர் கோவிலுக்கும், பக்தர்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இதிகாச எரிப்பு போராட்டம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ஸ்ரீரங்கத்தில் வருகிற 17-ந்தேதி (அதாவது இன்று) பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மனு ஸ்மிருதி, வேதங்கள் உள்ளிட்ட இதிகாச நூல்களை எரிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக மக்கள் அதிகாரம், தேசிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் தகவல்களை பரவலாக வெளியிட்டுள்ளனர்.
இந்த தகவல்கள் ரிக், யஜூர், சாமம், அதர்வணம் ஆகிய 4 வேதங்களில் நம்பிக்கை கொண்ட இந்துக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கத்துடன், வேத நூல்களை தவறாகக்கூறும் வகையிலும், அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. எனவே இந்த போராட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
அமைதி பேச்சுவார்த்தை
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் வக்கீல் செந்தில்குமார் ஆஜராகி, இதுகுறித்து அமைதி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில், இந்த போராட்டத்தை கைவிடுவது, மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பது, திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரியார் சிலைகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். பின்னர் அந்த தீர்மானத்தின் நகலை நீதிபதிகளிடம் சமர்ப்பித்தார்.
அதில், மத உணர்வுகள், மத வழிபாடு மற்றும் நம்பிக்கையை அவமரியாதை செய்யும் வகையில் நடத்தப்படும் எந்த ஒரு கூட்டம், போராட்டத்திற்கும், மாவட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் வழங்காது மீறி போராட்டம் நடத்தினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெரியார் சிலை முன் போராட்டம் நடத்த முன்வந்திருப்பதால், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரியார் சிலைகள் அருகே உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பல்வேறு தரப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதையடுத்து நீதிபதிகள், இந்த தீர்மானத்தை பதிவு செய்து கொள்கிறோம். சம்பந்தப்பட்ட பகுதியில் சட்டம்-ஒழுங்கையும், பொது அமைதியையும் பாதுகாக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம். ெரங்கநாதர் கோவிலுக்கும் பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த மனுவை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.