வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை மனு அளித்தவர்களிடம் மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் உறுதி


வெளிநாட்டில் சிக்கி தவிக்கும்              குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை  மனு அளித்தவர்களிடம் மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் உறுதி
x

வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் மனு அளித்தவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்,

வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் மனு அளித்தவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

மத்திய இணை மந்திரி ஆய்வு

மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் நேற்று குமரி மாவட்டத்தில் 3-வது நாளாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் மத்திய அரசின் திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்.அதன்படி நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பாலத்தை பார்வையிட்டு பாலத்தின் கட்டுமான பணிகள் மற்றும் அதன் உறுதி தன்மை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

இரட்டை ரெயில் பாதை பணி

இதை தொடர்ந்து பேயன்குழி பகுதியில் தற்போதைய நான்கு வழி சாலை பணி மற்றும் இரட்டை ரெயில் பாதை திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., பா.ஜனதா மாவட்ட தலைவர் தர்மராஜ், பொருளாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், கிருஷ்ணன் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மீனவர்கள் மனு

ஆய்வின் போது தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு மாநில செயலாளர் அந்தோணி தலைமையில் நிர்வாகி அகமது உசேன் உள்பட மீனவர்கள் சிலர் மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத்தை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், கன்னியாகுமரியை சேர்ந்த சகாய ஜெபிசன், ராஜாக்கமங்கலத்தை சேர்ந்த ஜாா்ஜ், பிரவீன்குமார் மற்றும் பெரியகாட்டை சேர்ந்த 6 பேர் என மொத்தம் 8 மீனவர்கள் ஓமன் நாட்டில் உள்ள மஸ்கட் பகுதியில் மீன்பிடிக்க சென்றனர். அங்கு சென்ற மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் சம்பளமும் கொடுக்காமல் சம்பந்தப்பட்ட விசைப்படகு உரிமையாளர் படகிலேயே 8 பேரையும் சிறை பிடித்து வைத்துள்ளார். மேலும் மீனவர்களின் விசாவும் புதுப்பிக்கப்படாததால் அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

எனவே மஸ்கட்டில் படகு உரிமையாளரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள குமரி மீனவர்கள் 8 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னர் மனு அளித்தவர்களிடம், மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் தெரிவித்தார்.

சூரிய உதயம்

முன்னதாக அதிகாலையில் மத்திய இணை மந்திரி பகவத் கிஷன்ராவ் கராத் தனது மனைவியுடன் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

அதனை தொடர்ந்து முக்கடல் சங்கமம் கடற்கரை பகுதிக்கு சென்று அவர் சூரிய உதயத்தை கண்டுகளித்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் கோவளம் கடற்கரைக்கு சென்று சூரிய அஸ்தமன கடற்கரை பகுதியையும் பார்வையிட்டார். மேலும் அவர் தனிபடகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தையும் ரசித்தார்.


Next Story