தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை -அமைச்சர் சேகர்பாபு தகவல்


தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை -அமைச்சர் சேகர்பாபு தகவல்
x

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை,

தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர் (ஓ.பன்னீர்செல்வம் அணி) மனோஜ் பாண்டியன், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் மாமன்னர் அரிகேசரி பராக்கிரம பாண்டியனால் 600 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது, கும்பாபிஷேகம் 2006-ம் ஆண்டு நடைபெற்றுள்ளது. அதேபோன்று தெப்பக்குளமும் செப்பனிடப்படவில்லை. எனவே கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தி, அந்த தெப்பக்குளத்தை சீரமைத்து, முழு நேர அன்னதான திட்டமும், அதேபோன்று மாமன்னர் முடிசூடி 600 ஆண்டுகள் கடந்ததை அரசு விழாவாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் தற்போது 100 நபர்கள் பயன்பெறும் வகையில் ஒருவேளை அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த கோவிலின் அன்னதான வைப்பு நிதியாக ரூ.20 லட்சம்தான் இருக்கின்றது. இந்த கோவிலின் கும்பாபிஷேக பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.6 கோடி மதிப்பீட்டிற்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டிருக்கின்றது. உபயதாரர்கள் எதிர்பார்க்கப்படுகின்றார்கள்.

கும்பாபிஷேகம்

உபயதாரர்கள் கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் முதல்-அமைச்சர் ஆயிரம் ஆண்டுகள் மேற்பட்ட கோவில்களை புனரமைக்க ரூ.100 கோடியை ஆண்டுதோறும் ஒதுக்கி வருகின்றார். அந்த ஒதுக்கீட்டில் வழங்கப்படுகின்ற நிதியில் ஒரு பகுதியை இந்த காசி விஸ்வநாதர் கோவிலின் பணிகளுக்கு பயன்படுத்தி உறுப்பினர் கோரிய வகையில் முதல் கட்டமாக கும்பாபிஷேகத்தை முழு வேகத்தோடு சிறந்த முறையில் நடத்தி முடிக்கப்படும்.

அதன் பிறகு கூடுதலாக பக்தர்கள் வருகின்றபோது தற்போது 100 நபர்களுக்கு வழங்கப்படுகின்ற அன்னதான திட்டத்தை விரிவு படுத்துகின்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story