பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை புதிய ஆணையர் ரமேஷ் பேட்டி
விழுப்புரம்
விழுப்புரம் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சுரேந்தர்ஷா திருவள்ளூர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திருவேற்காடு நகராட்சி ஆணையர் ரமேஷ் விழுப்புரம் நகராட்சிக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நேற்று விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிய ஆணையர் ரமேசுக்கு நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து அவர் நகர மன்ற தலைவர் சக்கரை தமிழ் செல்வியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர் அவர் கூறும்போது, விழுப்புரம் நகரில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் இப்பணிகள் பொதுமக்களுக்கு இடையூரின்றி மழை காலத்துக்குள் முடிக்கப்படும். அதேபோல் தடையின்றி குடிநீர் வழங்கவும், பொதுமக்களின் புகார் அடிப்படையில் அடிப்படை வசதிகளை உடனுக்குடன் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். மின்விளக்கு, குடிநீர் திட்டங்கள் தொடர்பாக பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். விழுப்புரத்தை தூய்மையான நகராட்சியாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.