தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை- மா.சுப்பிரமணியன்
வேலூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தொடங்கி வைத்தார்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று காலை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது ;
தமிழகத்தில் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. முதல் தவணை 2-வது தவணை, பூஸ்டர் தடுப்பூசி போன்றவை இந்த முகாம்களில் செலுத்தப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் டோஸ் 96.99 சதவீதம், 2-வது டோஸ் 89.5 சதவீதம் பேர் செலுத்தியுள்ளனர். 3.50 கோடி பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியுள்ளது. அதனை இலக்காக கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அடுத்த வாரம் டெல்லி சென்று மத்திய சுகாதாரத்துறை மந்திரியை சந்திக்க இருக்கிறோம். அப்போது கோவை, மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி கட்டிட பணிகள் குறித்தும் ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, பெரம்பலூர், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் புதிய மருத்துவக் கல்லூரி தேவைப்படுகிறது. இது குறித்து கோரிக்கை விடுக்க உள்ளோம். மேலும் தடுப்பூசி தேவை குறித்து தெரிவிக்க இருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்து, மாத்திரைகள் இருப்பு உள்ளன. ஒரு சிலர் மருந்து இல்லை என கற்பனை கதையை சொல்லி வருகின்றனர். ஒரு சில இடங்களில் 4 வகை மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக அளவில் அந்த மருந்துக்கான தேவை அதிகமாக இருந்ததால் அந்த நிலை இருந்தது. தற்போது அதுவும் சரியாகி விட்டது. காப்பீடு திட்டம் அரசு ஆஸ்பத்திரியில் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் போதுமான நிதி உள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் மருந்து இல்லை என கூறி பொதுமக்களை வெளியே அனுப்புவது குறித்து புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் 85 லட்சத்து 36 ஆயிரத்து 501 பேர் பயனடைந்துள்ளனர். இந்த திட்டம் உலகத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெறும் மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி கலந்து கொள்கிறார். இதில் பங்கேற்க எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் இல்லம் தேடி மருத்துவம் திட்டம் குறித்து விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.