இறந்து பிறந்த குழந்தை உடலுடன்உறவினர்கள் மறியல்


இறந்து பிறந்த குழந்தை உடலுடன்உறவினர்கள் மறியல்
x

ஆம்பூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை இறந்து பிறந்ததால் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருமணம்

ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 26). இவருக்கும் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த பெயிண்டர் வேலை செய்து வரும் விஜய்க்கும் (28) கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கர்ப்பிணியான பாக்கியலட்சுமி ஆம்பூர் ரெட்டி தோப்பில் இயங்கி வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ பரிசோதனை மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அங்கு பணியில் இருந்த நர்ஸ் ஒருவரிடம் வழக்கமான பரிசோதனை செய்து கொண்டார். அப்பொழுது கருவில் குழந்தை நலமாக இருப்பதாக தெரிவித்து அவர் அனுப்பி உள்ளார்.

இந்த நிலையில் வீட்டிற்கு சென்ற பாக்கியலட்சுமிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் குடும்பத்தினர் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதி

பரிசோதனை செய்த போது அவரது குழந்தை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஆம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துமனையில் பாக்கியலட்சுமி அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடந்த அறுவை சிகிச்சையில் இறந்த நிலையில் ஆண் குழந்தையை எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பாக்கியலட்சுமியின் குடும்பத்தினர் இறந்து பிறந்த குழந்தை உடலுடன் இரவு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு அலட்சியமாக இருந்த டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஆம்பூர் டவுன் போலீசார் விரைந்து வந்தனர். ஆம்பூர் தாசில்தார் (பொறுப்பு) மகாலட்சுமியும் அங்கு வந்தார். போலீசார் முன்னிலையில் அவர், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் உறவினர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story