பெண் கவுன்சிலர் போராட்டத்தால் பரபரப்பு


பெண் கவுன்சிலர் போராட்டத்தால் பரபரப்பு
x
தினத்தந்தி 1 Jun 2022 12:44 AM IST (Updated: 1 Jun 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் நகரசபை கூட்டத்தில் அவையின் முன் பகுதியில் பெண் கவுன்சிலர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்

விருதுநகர்,

விருதுநகர் நகரசபை கூட்டத்தில் அவையின் முன் பகுதியில் பெண் கவுன்சிலர் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகரசபை கூட்டம்

விருதுநகர் நகரசபையின் சாதாரண மற்றும் அவசர கூட்டம் நகரசபை தலைவர் மாதவன் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் தனலட்சுமி, கமிஷனர் சையது முஸ்தபா கமால், என்ஜினீயர் மணி உள்ளிட்ட அலுவலர்களும், நகர சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

விருதுநகர் நகரசபை சுயேச்சை பெண் உறுப்பினர் முத்துலட்சுமி தனது வார்டில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் சமையலறை கட்டிடம் கட்ட வேண்டும் என்றும் பல முறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நகரசபை தலைவர் மாதவன், இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை கேட்டிருப்பதாகவும் அங்குள்ள சுற்றுச்சுவரை இடித்தது யார் என்று விளக்கம் அளிக்க கேட்டுள்ளதாகவும் அதன்பின் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உறுப்பினர் முத்துலட்சுமி, அவையின் மையப்பகுதியில்அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

நடவடிக்கை

இதனைத்தொடர்ந்து உறுப்பினர்கள் ஆறுமுகம், ஜெயக்குமார் ஆகியோர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். இதனையடுத்து உடனடியாக நாளை ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக தலைவர் உறுதி அளித்ததின் பேரில் உறுப்பினர் முத்துலட்சுமி போராட்டத்தை கைவிட்டு இருக்கைக்கு திரும்பினார். இதனால் சிறிது நேரம் அவையில் பரபரப்பு ஏற்பட்டது. தி.மு.க. உறுப்பினர் ஆறுமுகம், நகரில் தனிநபர் ஒருவர் எவ்வித அனுமதியும் இன்றி பாதாள சாக்கடை வீட்டு இணைப்புகள் கொடுப்பதாகவும், அதற்கு வீட்டு உரிமையாளரிடம் தொகை பெற்றுக் கொள்வதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நகரில் மின்விளக்கு எப்பகுதியிலும் சரியாக எரியாமல் உள்ளதால் நகரசபை நிர்வாகமே பணியை மேற்கொள்ள வேண்டும் என்று உறுப்பினர்கள் முத்துராமன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து நகரசபை நிர்வாகம் இப்பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

சொத்து வரி

புதிய பஸ் நிலையம் முறையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர் கலையரசன் வலியுறுத்தினார். நகர்ப்பகுதியில் சொத்துவரிகேட்பு பட்டியலில் தவறாக இடம்பெற்ற இனங்களை கேட்பு பட்டியலில் இருந்து நீக்கும் தீர்மானம் விவாதத்திற்கு வந்தது. இதற்கு காங்கிரஸ் சார்பில் உறுப்பினர் பால்பாண்டி எதிர்ப்பு தெரிவித்தார்.

உறுப்பினர்கள் மதியழகன், ஜெயக்குமார் ஆகியோர் ஆய்வு குழு அமைத்து ஆய்வு செய்து அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரினர். இதனை தொடர்ந்து நகரசபை தலைவர் இதற்கான ஆய்வு குழு அமைக்கப்படும் என கூறினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story