16-ம் நூற்றாண்டு நடுக்கல் கண்டுபிடிப்பு


16-ம் நூற்றாண்டு நடுக்கல் கண்டுபிடிப்பு
x

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் 16-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

மதுரை

பேரையூர்,

மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே டி.குன்னத்தூரில் 16-ம் நூற்றாண்டு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கள ஆய்வு

மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரியின் முதுகலை வரலாற்றுத்துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனீஸ்வரன் தலைமையில், பேராசிரியர் முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்த குமரன், டி.குன்னத்தூர் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கி.பி. 16 -ம் நூற்றாண்டை சேர்ந்த வளரி வீரன் கல்சிற்பம் கண்டறியப்பட்டது.

இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:-

வளரி என்பது பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன் படுத்தப்படும் ஒரு வகை ஆயுதம். குறிப்பாக கால் நடைகளை திருடிச் செல்லும் திருடர்களை பிடிப்பதற்கும், போர்க் களத்தில் பயந்து ஓடி தப்பிப்பவர்களை உயிருடன் பிடிப்பதற்கு வளரியை பயன்படுத்தினார்கள்.

கையில் ஈட்டி

வளரியை கால்களுக்கு குறிவைத்து சுழற்றி வீசும் போது பிடிபடுவார்கள். வளரியை வளைதடி, திகிரி, பாறாவளை, சுழல்படை, கள்ளர்தடி, படை வட்டம் என்று அழைத்தனர்.

இந்த சிற்பம் வளரி வீரன் என்பதற்கு சான்றாக நடுப் பகுதியில் வீரன் கையில் ஈட்டியை பிடித்தவாறும், இடது கையில் வளரியை பிடித்தவாறும், வலது கால் சற்று சாய்ந்து முழங்கால் தெரியும் படி சிற்பம் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த சிற்பம் வளரி வீரன் சிற்பம் என்று அழைக்கப்படுகிறது.

வீரன் வலதுபுறத்தில் பெண் சிற்பம் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையுடன் வடிவமைக்கப் பட்டு உள்ளது. 2 பெண் சிற்பமும் ஆடை அலங்காரத்துடன் கொண்டை சரிந்து காணப்படுகிறது. இந்த சிற்பத்தை பார்க்கும் போது வளரி வீரன் இறந்த பிறகு 2 பேரும் உடன் கட்டை ஏறியதற்கு சான்றாக அறியமுடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story