டவுன் பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
டவுன் பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்ததாக சிறை சென்று திரும்பிய நபருக்கு வலைவீச்சு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பணிமனையில் இருந்து அரசு டவுன் பஸ் ஒன்று மோர்தனா கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. சேங்குன்றம் கிராமம் அருகே சென்றபோது அதே கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவர் சாலையின் குறுக்கே குடிபோதையில் நின்று கொண்டு கத்தியை காட்டி கலாட்டா செய்து கொண்டிருந்தார். அவர் திடீரென கற்கள் எடுத்து பஸ் மீது சரமாரியாக வீசினார். இதில் பஸ்சின் முன்பக்க மற்றும் பக்கவாட்டில் இருந்த கண்ணாடிகள் உடைந்தது. கண்ணாடி துண்டுகள் விழுந்து ஒரு பெண் பயணிக்கு காயம் ஏற்பட்டது.
உடனே டிரைவர் சவுந்தரராஜன், கண்டக்டர் சீனிவாசன் கீழே இறங்கி வந்தபோது அவர்களை பூவரசன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதை தொடர்ந்து பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தனியார் பஸ்சையும் வழிமறித்து தகராறு செய்துள்ளார். அந்த வழியாக சென்ற காரை நிறுத்தி தகராறு செய்து காரில் இருந்த நபரை கத்தியால் வெட்டியுள்ளார். இதனை தொடர்ந்து டவுன் பஸ் டிரைவர் சவுந்தர்ராஜன், கண்டக்டர் சீனிவாசன் ஆகியோர் குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் பூவரசன் மீது, இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகிறார்.
பூவரசன் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.