வரலாற்றை சுமந்தபடி புதைந்து கிடக்கும் கல்சிற்பங்கள்


வரலாற்றை சுமந்தபடி புதைந்து கிடக்கும் கல்சிற்பங்கள்
x
தினத்தந்தி 27 Sept 2023 2:45 AM IST (Updated: 27 Sept 2023 2:45 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் மலைப்பகுதியில் வரலாற்றை சுமந்தபடி கல்சிற்பங்கள் புதைந்து கிடக்கின்றன.

திண்டுக்கல்

'கொடைக்கானல்' என்ற பெயரை உதடுகள் உச்சரித்தவுடன் இதயமே குளிரில் சிலிர்த்து விடும். சர்வதேச சுற்றுலாதலமான கொடைக்கானலுக்கு 'மலைகளின் இளவரசி' என்ற மற்றொரு பெயரும் உண்டு. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளுடன், எப்போதும் இளமையாக இருப்பதால் கொடைக்கானலுக்கு அப்பெயர் உண்டாயிற்று.

குளு, குளு சீசன், பசுமை போர்த்திய புல்வெளிகள், மலை முகடுகளை முத்தமிடும் மேக கூட்டம், மனதை மயக்கும் பல வண்ண காட்டுப்பூக்கள், இதயத்தை வருடும் இதமான பனிச்சாரல், சில்லென வீசும் காற்று, ஆங்காங்கே ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள், வானுயர்ந்த மரங்கள், பறவைகளின் கீச்சிடும் குரல், பிரமிக்க வைக்கும் பள்ளத்தாக்கு, வளைந்து நெளிந்து செல்லும் மலைப்பாதை, திகைக்க வைக்கும் வனவிலங்குகள் என கொடைக்கானலை பற்றி அடுக்கி கொண்டே போகலாம்.

ஒருமுறை வந்த சுற்றுலாப்பயணிகள், மீண்டும் எப்போது அங்கு செல்வோம் என்று ஏங்க வைத்துவிடுவது கொடைக்கானலின் தனிப்பெரும் சிறப்பு. மொத்தம் 600 சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது கொடைக்கானல் மலைப்பகுதி. இங்கு இன்னும் பல இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் சுற்றுலா பயணிகளின் விழிகளுக்கு படாமல் மறைந்தே கிடக்கிறது.

இதுமட்டுமின்றி வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்களும் கொடைக்கானல் மலையில் புதைந்து கிடைக்கின்றன. பழமையான கல்சிற்பங்கள், ஆதிமனிதன் வாழ்ந்த குகைகள், கல்தூண்கள் கொடைக்கானல் பகுதியில் ஏராளமாக உள்ளன. தற்போது அவை வெறும் காட்சி பொருட்களாகி விட்டன. அவற்றின் அருமை, பெருமைகளை வெளி உலகத்துக்கு எடுத்து செல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.

குறிப்பாக சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தாண்டிக்குடி, பேத்துப்பாறை, அடுக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குள்ள மனிதர்கள் வாழ்ந்து இருக்கின்றனர். இதற்கான அடையாளம் இன்றளவும் அங்கு கற்திட்டைகளாக காட்சி அளித்து கொண்டிருக்கின்றன. பேத்துப்பாறை பகுதியிலும் ஏராளமான கற்திட்டைகள் உள்ளன. அவற்றை கிராம மக்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இதேபோல் கொடைக்கானலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடுக்கம் ஊராட்சி பகுதியில், பாண்டிய மன்னர் காலத்தில் வணிகம் நடந்ததற்கான ஆதாரம் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு வணிக பாதைகள் என்று கருதப்படுகிற தலைவாசல் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை பற்றிய ஆய்வு மந்தமாகவே உள்ளது.

கொடைக்கானலில் இருந்து சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் பூம்பாறை கிராமம் உள்ளது. திரும்பி பார்க்கும் திசைகளில் எல்லாம் பச்சைப்சேல் என்று காட்சி அளிக்கும் இடம் அது. விவசாய பூமியான அங்கு பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற குழந்தை வேலப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் சேரமன்னர் காலத்தில் செதுக்கப்பட்ட கல்சிற்பங்களை கொண்டு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

பண்டைக்காலத்தில் சேரமன்னன் ஒருவரின் கனவில் திருமண கோலத்தில் முருகப்பெருமான் தோன்றி, பூம்பாறை மலை உச்சியில் காட்சி அளிக்கபோவதாக கூறினார். இதைத்தொடர்ந்து சேரமன்னன் பூம்பாறை கிராமத்தில் சிற்பிகளை கொண்டு, வரலாற்று சிறப்பு மிக்க சிற்பங்களை செதுக்கி திருமண மண்டபம் ஒன்றை அமைத்தார்.

காலப்போக்கில் இயற்கை சீற்றத்தால் அந்த சிற்பங்கள் சிதிலம் அடைந்தன. திருமண மண்டபமும் இடிந்து விட்டது. பிற்காலத்தில் அங்கு வசித்த கிராமவாசிகள், அங்கிருந்த தூண்கள் மற்றும் சிற்பங்களை கொண்டு குழந்தை வேலப்பர் கோவிலை கட்டியதாக கூறப்படுகிறது. இன்றளவும், குழந்தை வேலப்பர் கோவிலில் அந்த கல்சிற்பங்களை நாம் காண முடிகிறது.

இதுமட்டுமின்றி பூம்பாறை கிராமத்தின் பல்வறேு தெருக்களில் 20-க்கும் மேற்பட்ட சிற்பங்கள் ஆங்காங்கே கேட்பாரற்று கிடக்கின்றன. சேரமன்னரால் கட்டப்பட்ட திருமண மண்டபத்தில் உள்ள கற்சிற்பங்கள் மற்றும் கல்தூண்கள் சிலவற்றை கிராம மக்கள் இன்று வரை பாதுகாத்து வைத்துள்ளனர். அந்த சிற்பங்கள் பல்வேறு வரலாற்று உண்மைகளை பிரதிபலித்து கொண்டிருக்கிறது.

முறத்தால் புலியை விரட்டிய தமிழ் பெண்னை பற்றி நாம் பாடத்தில் படித்திருக்கிறோம். ஆனால் இங்குள்ள ஒரு கல்சிற்பத்தில், வேடுவர் குலப்பெண்ணின் காலை புலி ஒன்று தனது காலால் தாக்க முயல்கிறது. ஆனால் அந்த பெண் புலிக்கு அஞ்சாமல், தன் ஒரு கையால் வயிற்றிலும், மற்றொரு கையால் முதுகிலும் குருவாள்களை கொண்டு புலியை குத்துவது போன்ற சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சி, பண்டைக்காலத்தில் வாழ்ந்த பெண்ணின் வீரத்தை பறைசாற்றுகிறது.

இதேபோல் அக்காலத்தில் பெண்களுக்கு போர் பயிற்சி அளிக்கப்பட்டதற்கான ஆதாரமும் கல்சிற்பத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடையாளமாக ஒரு பெண் தனது கையில், வில்-அம்புடன் கூடிய தோற்றத்துடன் கல்சிலை ஒன்றையும் காண முடிகிறது. இதுமட்டுமின்றி இயல், இசை, நாடகம் என முத்தமிழை பிரதிபலிக்கும் சிற்பங்களும் அங்கு கிடைத்துள்ளன. இங்குள்ள ஒவ்வொரு சிற்பங்களும் ஏதோவொரு உண்மை சம்பவங்களை சுமந்தபடி காட்சி அளித்து கொண்டிருக்கின்றன. இவற்றில் சில சிற்பங்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இதுபோன்ற பல்வேறு வரலாற்று சான்றுகளுடன் பூம்பாறை கிராமத்தில் கல்சிற்பங்கள் புதைந்து கிடக்கின்றன. அந்த சிற்பங்களை ஆய்வுக்கு உட்படுத்தினால், பல்வேறு வரலாற்று ஆதாரங்களை வெளியே கொண்டு வர முடியும் என்பது பூம்பாறை கிராம மக்களின் நம்பிக்கை ஆகும். ஆனால் இதற்கான முயற்சியில் தொல்லியல் துறையும், தமிழக அரசும் ஈடுபடவில்லை என்பது கிராம மக்களின் புலம்பலாக எதிரொலிக்கிறது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆய்வு செய்து, பல்வேறு வரலாற்று அதிசயங்களை உலகுக்கு எடுத்து சென்றதை போல, கொடைக்கானல் மலைக்கிராமங்களிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. இதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று காத்திருக்கின்றனர் கொடைக்கானல் வாசிகள்.


Next Story