போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் கற்கள்


போக்குவரத்துக்கு இடையூறாக கிடக்கும் கற்கள்
x
தினத்தந்தி 18 Jun 2023 10:30 PM GMT (Updated: 18 Jun 2023 10:30 PM GMT)

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் பல இடங்களில் கற்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அகலம் குறைந்த, வளைவான இடங்களில் வாகனங்களுக்கு வழிவிட முடியாத வகையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

நீலகிரி

கூடலூர்

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரம் பல இடங்களில் கற்கள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் அகலம் குறைந்த, வளைவான இடங்களில் வாகனங்களுக்கு வழிவிட முடியாத வகையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.

விரிவாக்க பணி

கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலா வாகனங்கள், பஸ்கள், சரக்கு லாரிகள் இயக்கப்பட்டு வருகிறது. சீசன் காலங்களில் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவதால், வாகனங்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்து காணப்படுகிறது. இதனால் அடிக்கடி போக்குவரத்து ெநரிசல் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலை துறையினர் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சாலை விரிவாக்க பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேபோல் ஆண்டுதோறும் கூடலூர் பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வரும் சமயத்தில் தேசிய நெடுஞ்சாலையிலும் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. அப்போது சாலையின் மேற்புறம் உள்ள பகுதியில் இருந்து ராட்சத கற்களும் உருண்டு விழுகிறது. ஆனால், அந்த கற்களை உடனடியாக அகற்றுவதில்லை. நீண்ட காலமாக சாலையோரம் கிடந்து வருகிறது.

போக்குவரத்துக்கு இடையூறு

கடந்த காலங்களில் பயணிகள் அமர்ந்து செல்லக்கூடிய அரசு பஸ்கள் குறைவான நீளம் கொண்டதாக இருந்தது. தற்போது நீளம் அதிகம் கொண்ட சொகுசு பஸ்கள் வெளி மாநிலங்களில் இருந்து அதிகளவு ஊட்டிக்கு இயக்கப்படுகிறது. இதனால் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தவளமலை காட்சி முனைப்பகுதி உள்பட வளைவான இடங்களில் பஸ்கள் வரும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட முடியாத வகையில் சாலையோரம் ராட்சத கற்கள் கிடக்கிறது.

இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. மேலும் வாகனங்கள் பின்னோக்கி சென்றால் தான், எதிரே வரும் வாகனங்கள் செல்ல முடியும். இதேபோல் சரக்கு லாரிகளும் இயக்கப்படுவதால் மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் வாகன போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் அகற்றப்படாமல் கிடக்கும் ராட்சத கற்களை அகற்ற வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story