மின்வாரிய அலுவலகம் மீது கல்வீசி ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு
கிள்ளியூரில் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகம் மீது கல்வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கருங்கல்:
கிள்ளியூரில் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகம் மீது கல்வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மின்வாரிய அலுவலகம்
கருங்கல் அருேக உள்ள கிள்ளியூரில் தமிழ்நாடு மின்சார வாரியம் பிரிவு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரே ஒரு ஊழியர் மட்டும் பணியில் இருந்தார். நள்ளிரவு 12 மணியளவில் யாரோ மர்ம நபர்கள் அலுவலகம் மீது சரமாரியாக கல் வீசினர். இதில் அலுவலக ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன.
இதைகண்டு பணியில் இருந்த ஊழியர் அதிர்ச்சி அடைந்தார். அவர் சத்தம் போட்ட நிலையில் வெளியே வந்து பார்த்தார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்றனர். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று ெதரியவில்லை.
போலீசார் விசாரணை
இதுகுறித்து கிள்ளியூர் பகிர்மானம் உதவி மின்பொறியாளர் ரமேஷ் கருங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் இசக்கித்துரை தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் மின்வாரிய அலுவலகம் மீது கல்வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மின்வாரிய அலுவலகம் மீது கல் வீசி ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.