ஓடும் அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு


ஓடும் அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 2 Jun 2023 9:20 AM GMT)

கோலியனூர் கூட்டுரோடு அருகே சினிமாவை மிஞ்சும் வகையில் ஓடும் அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய மர்ம நபர்களை டிரைவர் காரில் துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

விழுப்புரம்

வளவனூர்

அரசு விரைவு பஸ்

சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு சொந்தமான குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பஸ் ஒன்று கும்பகோணம் நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது.

அந்த பஸ்சை ஜெயங்கொண்டத்தை சேர்ந்த நீலமேகம்(49) என்பவர் ஓட்டினார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை கோலியனூர் கூட்டுரோடு அருகே பஸ் வந்தபோது எதிரே இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்த 2 மர்ம நபர்கள் பஸ் மீது மோதுவது போல் வந்தனர்.

கண்ணாடி உடைப்பு

பஸ்சின் முகப்பு விளக்கு வெளிச்சத்தால் கண்கூச்சம் ஏற்பட்டு அதனால் அவர்கள் திசை மாறி பஸ் மீது மோத வருவதாக கருதிய டிரைவர் பஸ்சின் முகப்பு விளக்கை உடனடியாக அணைத்ததோடு, வேகத்தையும் குறைத்தார்.

அப்போது பஸ்சின் அருகில் வந்த மர்ம நபர்கள் திடீரென கல்வீசி பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து சென்னை மார்க்கமாக தப்பி சென்றனர். இந்த சத்தம் கேட்டு பஸ்சில் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

காரில் துரத்தி சென்றார்

இதையடுத்து டிரைவர் நீலமேகம் பஸ்சை ஓரமாக நிறுத்திவிட்டு எதிரே வந்த காரில் லிப்ட் கேட்டு மர்ம நபர்களை துரத்தி சென்றார். விக்கிரவாண்டி சுங்கச்சாவடி வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் சென்று பாா்த்தபோது மர்ம நபர்களை காணவில்லை.

இதையடுத்து சுங்கச்சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் மர்ம நபர்களின் உருவம் பதிவாகி இருக்கிறதா? என்பதை அறிவதற்காக சுங்கச்சாவடி ஊழியர்களிடம் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை காண்பிக்குமாறு கூறினார். ஆனால் அதற்கு அவர்கள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

போலீசில் புகார்

இதையடுத்து அங்கிருந்து அரசு பஸ்சில் ஏறி கோலியனூர் கூட்டுரோடு வந்த நீலமேகம் நடந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர் அங்கிருந்து பஸ்சை எடுத்துக்கொண்டு கும்பகோணம் நோக்கி புறப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த முகமூடி அணிந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

சினிமாவை மிஞ்சும் வகையில் தான் ஓட்டி வந்த பஸ்சின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பி சென்ற மர்ம நபர்களை டிரைவர் காரில் துரத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story