நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கம்


நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கம்
x

நாட்டறம்பள்ளி அருகே நிறுத்தப்பட்ட அரசு டவுன் பஸ் மீண்டும் இயக்கப்பட்டது.

திருப்பத்தூர்

நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் செட்டேரி டேம் பகுதியில் இருந்து சந்திரபுரம் வழியாக திருப்பத்தூர் வரை சென்று வந்த அரசு டவுன் பஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று காலத்தில் நிறுத்தப்பட்டது. இந்த பஸ்சை மீண்டும் இயக்க அப்பகுதி பொதுமக்கள் ஜோலார்பேட்டை தொகுதி தேவராஜி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதன்பேரில் அவர் போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் பேசி அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்த நிலையில் நாட்டறம்பள்ளி அருகே சந்திரபுரம் பகுதியில் இருந்து வெலக்கல்நத்தம் செட்டேரி டேம் வரை அரசு டவுன் பஸ் தொடக்க விழா நடைபெற்றது. க.தேவராஜி எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கொடி அசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்து, பஸ்சில் பயணம் செய்த அனைத்து பயணிகளுக்கும் தனது சொந்த செலவில் டிக்கெட் வாங்கி அனுப்பி வைத்தார்.

இந்த டவுன் பஸ் தினமும் காலை 6 மணியளவில் செட்டேரி டேம் பகுதியில் இருந்து புறப்பட்டு புத்தகரம் சந்திரபுரம் வழியாக திருப்பத்தூர் பஸ் நிலையத்துக்கு 7 மணிக்கு சென்று அடைகிறது. அங்கிருந்து மாலை 6.15 மணியளவில் புறப்பட்டு 7.15 மணியளவில் செட்டேரி டேம் சென்று அடைகிறது. 3 ஆண்டுகளுக்கு பிறகு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் கே.சதிஷ்குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் சத்யாசதீஷ்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், திருப்பத்தூர் பணிமனை மேலாளர் மயில்வாகனம், துணை மேலாளர் ராஜராஜன், கோட்ட மேலாளர் அரவிந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story