தமிழகம் முழுவதும் பாட்டிலில் பெட்ரோல், டீசல் விற்பனை நிறுத்தம்
தமிழகம் முழுவதும் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,
கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில், பாஜக அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடு, கார் மற்றும் கடைகளுக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. மேலும், தீவைப்பு சம்பவங்களும் நடந்தன. இந்நிலையில், சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு 17 மாவட்ட கலெக்டர்களுடன் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்தநிலையில், தமிழகத்தில் முழுவதும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோலை பாட்டில்களில் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. காவல்துறையின் அறிவுறுத்தலை ஏற்று தமிழகம் முழுவதும் பாட்டில் மற்றும் கேன்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்வது நிறுத்தப்பட்டுள்ளதாக பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.