எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாயல்குடியில் சாலை மறியல் நடந்தது.
சாயல்குடி,
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாயல்குடியில் சாலை மறியல் நடந்தது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வாலிநோக்கம் பகுதியை சேர்ந்தவர் பரக்கத்துல்லா(வயது 43). இவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவராக உள்ளார்.
இவர் மீது சில புகார்கள் வந்திருப்பதாக கூறி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் குழுவினரும், அமலாக்கத்துறை அதிகாரிகளும் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு வாலிநோக்கம் வந்தனர்.
பரக்கத்துல்லா வீட்டில் சோதனை நடத்தினார்கள். சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததா? தடை செய்த அமைப்புகள் குறித்தும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சோதனை அதிகாலை 5.30 மணி வரை நீடித்தது.
மறியலுக்கு முயன்ற கட்சியினர்
பின்னர் பரக்கத்துல்லாவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்காக அங்கிருந்து சென்னை அழைத்து சென்றனர். இந்த சோதனை நடந்த போது அவரது வீட்டு முன்பும், வாலிநோக்கம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நேற்று காலை பரக்கத்துல்லா வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்திய தகவல் அறிந்ததும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர், ஊர்மக்கள் திரண்டனர். இந்த சோதனைக்கு எதிர்்ப்பு தெரிவித்து அவர்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் போராட்டத்துக்கு முயன்றனர்.
கீழக்கரை துணை சூப்பிரண்டு சுபாஷ், சிக்கல் இன்ஸ்பெக்டர் முருகதாசன், வாலிநோக்கம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார், சாலைமறியலுக்கு முயன்றவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமலாக்கத்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
சாயல்குடியில் மறியல்
இந்த சோதனைக்கு கண்டனம் தெரிவித்து, சாயல்குடியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று மதியம் 1.30 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.