எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி உள்பட 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை


எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி உள்பட 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை
x
தினத்தந்தி 3 Nov 2022 12:15 AM IST (Updated: 3 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கார்வெடிப்பு சம்பவத்தைதொடர்ந்து கோவை எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி உள்பட 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கோயம்புத்தூர்


கார்வெடிப்பு சம்பவத்தைதொடர்ந்து கோவை எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி உள்பட 4 பேர் வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

கார் வெடிப்பு

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி கார் வெடித்தது. இதில் ஜமேஷா முபின் பலியானார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இதுவரை கோவையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் இந்த கார் வெடிப்பு வழக்கானது தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவை மாநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

வீடுகளில் சோதனை

இந்த நிலையில் கோவை உக்கடம் ஜி.எம்.நகரில் வசித்து வருபவர் ராஜா உசேன். இவர் எஸ்.டி.பி.ஐ. கட்சியில் நிர்வாகியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று காலை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் தலைமையில் ராஜா உசேன் வீட்டிலும், உக்கடம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி வீட்டில் வசித்து வரும் முகமது உசேன் என்பவரின் வீட்டில் இன்ஸ்பெக்டர் சுஜதா தலைமையிலும் மற்றும் சாய்பாபா காலனியில் உள்ள மற்றொரு எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி ரோஷன் என்பவர் வீட்டிலும், உக்கடம் அன்புநகரில் உள்ள த.மு.மு.க. நிர்வாகி சாதிக்அலி என்பவர் வீட்டிலும் மொத்தம் 4 பேர் வீடுகளில் நேற்று போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர்.

விபரங்கள் சேகரிப்பு

இதுதவிர கார் வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் வசித்து வந்த உக்கடம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளில் வசிப்பவர்களின் பெயர் விபரங்களையும் போலீசார் சேகரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கோவை மாநகரில் சோதனை நடத்த வேண்டியவர்களின் பெயர் பட்டியல் அந்தந்த போலீஸ் நிலையம் வாரியாக தயார் செய்யப்பட்டது. இதன்அடிப்படையில் இன்று (நேற்று) எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகள், த.மு.மு.க. நிர்வாகி உள்ளிட்ட வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.கோவையில் முகாமிட்டுள்ள என்.ஐ.ஏ. அதிகாரிகள் தயாரித்து அளித்த பட்டியல் படி இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சோதனை குறித்து எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி ராஜா உசேன் கூறியதாவது:-

ஏற்கனவே மனு

குறிப்பிட்ட சமுதாயத்தினரை குறிவைத்து சோதனை நடத்தக்கூடாது என்று மாவட்ட நிர்வாகத்திற்கும், போலீசாருக்கும் நாங்கள் ஏற்கனவே மனு அளித்து உள்ளோம். இருப்பினும் சிறுபான்மையினரை அச்சுறுத்தும் வகையில் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இன்று (காலை) எனது வீட்டிற்கு சோதனை நடத்த போலீசார் வந்தனர். அவர்களிடம் எந்த முகாந்தரத்தின் அடிப்படையில் எனது வீட்டில் சோதனை நடத்த உள்ளீர்கள், அதற்கான ஆவணங்களை காண்பிக்கும்படி கூறினேன். ஆனால் அவர்கள் ஆவணங்களை காண்பிக்கவில்லை. மேலும் எனது வீட்டில் சோதனை நடத்தாமல் திரும்பி சென்றனர் என்றார்.


Next Story