பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலை சிக்கி போராடிய தெருநாய்


பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலை சிக்கி போராடிய தெருநாய்
x
தினத்தந்தி 23 May 2023 12:15 AM IST (Updated: 23 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலை சிக்கி போராடிய தெருநாய்

கோயம்புத்தூர்

கோவை

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலை சிக்கி போராடிய தெருநாயை 10 நாட்களுக்கு பிறகு தன்னார்வ அமைப்பினர் மீட்டனர்.

தெருநாய்

கோவை பீளமேடு அடுத்துள்ள சேரன் மாநகர் பகுதியில் உள்ள குமுதம் நகரில் ஒரு தெருநாய் அங்குள்ள ஒரு குப்பை தொட்டியில் வீசப்பட்டு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டது. அதன்பின்னர் தலை வெளியே வரவில்லை.

இதனால்பிளாஸ்டிக் டப்பாவுடன் அந்த தெருநாய் கடந்த 10 நாட்களாக கடுமையான போராட்டத்துடன் அலைந்து திரிந்தது. இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் அந்த நாயின் தலையில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் டப்பாவை அகற்ற தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர். ஆனால் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

மீட்பு

இது குறித்து பிளானெடிக் பவுண்டேசன் என்ற விலங்குகள் நல தன்னாவ அமைப்புக்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் குமுதம் நகர் பகுதிக்கு வலையுடன் வந்தனர். அப்போது அந்த நாய், அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக படுத்திருந்தது. குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, வலையைவீசி லாவகமாக நாயை பிடித்த குழுவினர், அதன் தலையில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் டப்பாவை எடுத்து நாயை மீட்டனர்.

அதன் பின்னர் நாய் துள்ளிக்குதித்து ஓடியது. விலங்குகள் நல தன்னார்வ அமைப்புக்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியோடு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர். பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

---


Next Story